விஜயகாந்த் நினைவு தினம்.. தலைவர்கள் மரியாதை.. பிரேமலதா தலைமையில் தேமுதிகவினர் அமைதி பேரணி!

Vijayakanth's 2nd death anniversary; விஜயகாந்தின் குருபூஜையில் முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் அதில் கலந்துக்கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக துணை முதல்வர் உதயிநிதி ஸ்டாலின் இந்த குருபூஜை விழாவில் கலந்துகொண்டு, விஜயகாந்த் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விஜயகாந்த் நினைவு தினம்.. தலைவர்கள் மரியாதை.. பிரேமலதா தலைமையில் தேமுதிகவினர் அமைதி பேரணி!

விஜயகாந்த் குருபூஜை

Updated On: 

28 Dec 2025 11:47 AM

 IST

சென்னை, டிசம்பர் 28: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து பிரேமலதா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, பிரேமலதா தலைமையில் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினர். அதோடு, விஜயகாந்தின் நினைவிடத்தில் தொண்டர்கள் பலர் தலையில் இருமுடி ஏந்தியும் மரியாதை செலுத்தினார். முன்னதாக, கோயம்பேடு அம்பேத்கர் சிலையில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை பிரேமலதா தலைமையில் அமைதி பேரணியும் நடைபெற்றது.

மேலும் படிக்க: தமிழ் தேசியத்தின் முதல் எதிரி திரைக்கவர்ச்சி…விஜய் மீது சீமான் மறைமுக அட்டாக்!

தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணம்:

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது மறைவு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்தின் 2ஆம் ஆண்டு நினைவு தினம்:

இந்நிலையில், விஜயகாந்தின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை குருபூஜையாக தேமுதிகவினர் கடைபிடிக்கின்றனர். இதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையொட்டி, காலை முதலே அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதோடு, அங்கு அவர் நடித்த படங்களின் புகைப்படங்கள் பலவும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வெண்கலத்தால் ஆன சிம்மாசனத்தில் விஜயகாந்தின் மார்பளவு சிலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

விஜயகாந்த் நினைவிடம் நோக்கி அமைதி பேரணி:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு வந்து விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதையொட்டி, சென்னை கோயம்பேட்டில் தேமுதிகவினர் அமைதி பேரணி நடத்தினர். பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணி நடைபெற்றது. இதில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், சுதீஷ் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள், தேமுதிக தொண்டர்கள் பங்கேற்றனர்.

விஜயகாந்த் சிலைக்கு மரியாதை:

பேரணி தேமுதிக அலுவலகத்தை வந்தடைந்ததும், விஜயகாந்த் நினைவிடத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும், நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் சிலைக்கு பிரேமலதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த பேரணியின்போது 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குருபூஜையில் உதயநிதி ஸ்டாலின்:

இதனிடையே, விஜயகாந்தின் குருபூஜையில் முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் அதில் கலந்துக்கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக துணை முதல்வர் உதயிநிதி ஸ்டாலின் இந்த குருபூஜை விழாவில் கலந்துகொண்டு, விஜயகாந்த் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நண்பர் விஜயகாந்த் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்:

இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: பாஜகவின் முகமூடியாக செயல்படும் சீமான்-விஜய்..சனாதனத்துக்கு ஆதரவானவர்கள்…தொல்.திருமாவளவன் தாக்கு!

குருபூஜையில் தலைவர்கள் மரியாதை:

விஜயகாந்த் நினைவிடத்தில் நடைபெறும் இந்த குருபூஜை விழாவில் காலை முதல் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வந்து மரியாதை செலுத்திய வண்ணம் உள்ளனர். அந்தவகையில், பாஜக தரப்பில் தமிழிசை செளந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.

இனி ஆதாருடன் APAAR ஐடியும் கட்டாயம்.. CET தேர்வகர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு
2025 ஆம் ஆண்டு எப்படி இருந்தது? இணையத்தில் வைரலாகும் சமந்தா பகிர்ந்த புகைப்படங்கள்..
முதல்முறையாக வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!
2025ல் ஸ்விகியில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு எது தெரியுமா?