கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல்…தமிழக எல்லையில் பலத்த கண்காணிப்பு…வாகனங்களுக்கு தடை!
Kerala Bird Flu: கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லை பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை, மருத்துவத் துறை உள்ளிட்டோர் அடங்கிய குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கேரள மாநிலத்தில் கோட்டையம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்த பறவை காய்ச்சல் தொற்று அண்டை மாநிலமான தமிழகத்திலும் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகளவு உள்ளது. இந்த நிலையில், கேரள மாநிலத்தில் இருந்து கோழிகள், முட்டைகள், கோழி தீவனங்கள், கோழி எச்சங்கள் ஆகியவற்றை ஏற்றி வரும் வாகனங்களை கண்காணிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள 8 சோதனைச் சாவடிகள், தடுப்புச் சாவடிகள், கர்நாடக மாநில எல்லை சோதனை சாவடி ஆகிய 8 சோதனை தடுப்பு சாவடிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாவடிகளில், ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில் கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் மற்றும் போலீசார், வனத்துறையினர், வருவாய்த் துறையினர் ஆகியோர் அடங்கிய குழு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மனிதர்களையும் பறவை காய்ச்சல் தாக்க வாய்ப்பு
பறவை காய்ச்சல் என்பது கோழிகள் மற்றும் பறவைகளை மட்டும் தாக்காமல் மனிதர்களையும் இந்த காய்ச்சல் தாக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளில் இருந்தும் இந்த நோய் தமிழகத்தில் பரவ வாய்ப்புள்ளது. எனவே, தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் முதன் முறையாக சோலார் படகு சேவை…எங்கு தெரியுமா… குஷியில் சுற்றுலா பயணிகள்!
பண்ணை உபகரணங்களை சுத்தம் செய்ய வேண்டும்
மேலும், காட்டுப் பகுதியில் உள்ள பறவைகள் கோழி பண்ணைகளுக்குள் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாத்து, கோழி, வான்கோழி ஆகியவற்றை ஒரே பண்ணையில் வைத்து வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். வெளி நபர்கள் மற்றும் வெளி வாகனங்களை பண்ணைக்குள் நுழைவதை அனுமதிக்க கூடாது. இதே போல, மற்றொரு பண்ணையில் இருந்து உபகரணங்களை உபயோகிக்க கூடாது. பண்ணையில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை மாதத்திற்கு இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
நோய் பாதிப்புக்குள்ளான பறவைகள்
இதையும் மீறி கோழிப்பண்ணையில் வழக்கத்துக்கு மாறாக மொழிகள் உயிரிழந்தால் சிறிதும் தாமதிக்காமல் கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நோய் பாதிப்புக்கு உள்ளான பறவைகளின் தலை மற்றும் கொண்டையில் வீக்கம், சோர்வு, இறந்த கோழிகளின் உடலில் ரத்தக் கசிவு உள்ளிட்டவை அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறி உள்ள பறவைகளை கையாளும் நபருக்கு காற்று மூலம் நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே, பறவை காய்ச்சல் பாதிப்பில் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கோவையில் இரு வடமாநில தொழிலாளிக்கு கத்திக்குத்து….இரு இளைஞர்கள் வெறிச்செயல்!