புதுச்சேரியில் டிச.9ல் தவெக பொதுக்கூட்டம்.. 5000 பேருக்கு அனுமதி.. நோ ரோடு ஷோ!!
Tvk meet at puducherry: புதுச்சேரியிலும் ரோடு ஷோ நடத்த அனுமதி கிடைக்கவில்லை. கரூர் துயரச் சம்பவத்தால், பாதுகாப்பு காரணங்களை காட்டி, ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மறுத்துள்ளார். பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அதற்கும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தவெக தலைவர் விஜய்
புதுச்சேரி, டிசம்பர் 06: தவெக தலைவர் விஜய், புதுச்சேரியில் டிசம்பர் 9-ம் தேதி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால், ரோடு ஷோ நடத்த மீண்டும் அனுமதி தரவில்லை. அதோடு, பொதுக்கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் நிபந்தனை வழங்கியுள்ளனர். ஏற்கெனவே, டிசம்பர் 5ம் தேதி புதுச்சேரியல் ரோடு ஷோ, பொதுக்கூட்டம் நடத்த தவெக திட்டமிட்டிருந்தது. எனினும், அப்போதும் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெறும் வகையில், அன்று நடைபெற திட்டமிட்டிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ரோடு ஷோவுக்கு அனுமதி பெற தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியையும் சந்தித்திருந்தார். அவரும் பாதுகாப்பு காரணங்களை காட்டி அனுமதி மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவும் 6 முக்கிய புள்ளிகள்…யார் அவர்கள்!
கரூர் துயரத்தால் விஜய்க்கு நெருக்கடி:
முன்னதாக, கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவம் தான் விறுவிறுப்பாக இயங்கி வந்த விஜய்யின் அரசியல் பயணத்துக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. அதன்பின், ஒரு மாதம் முடங்கியிருந்த விஜய், பாதிக்கப்பட்டவர்களை கரூரில் இருந்து தனிப்பேருந்துகள் மூலம் சென்னை அழைத்து வந்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பின்னர், அரசியலில் மீண்டும் பரபரப்பாக இயங்க தொடங்கினார்.
எனினும், அவர் மீது அடுக்கடுக்காக தொடர் விமர்சனங்கள் எழுந்தன. அதாவது, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்கவில்லை, துயரச் சம்பவம் நிகழ்ந்தவுடன் கரூரை விட்டு அவசரமாக சென்னைக்கு திரும்பிவிட்டார். தவெகவினர் யாரும் களத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவில்லை என ஏராளமான விமர்சனங்களை விஜய்யும், அக்கட்சியும் எதிர்கொண்டது. எனினும், இந்த விமர்சனத்திற்கு விஜய், எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. ஏன், தற்போது வரை அவர் எந்த இடத்திலும் கரூர் சம்பவம் குறித்து பேசியதில்லை. கடைசியாக காஞ்சிபுரத்தில் பேசியபோது கூட, கரூர் விவகாரம் குறித்து இப்போது பேச மாட்டேன் என்றே கூறினார்.
இதையும் படிக்க : புதுச்சேரி பயணத்தை ரத்து செய்த விஜய் – காரணம் இதுதான் – பரபரப்பு தகவல்
இந்நிலையில், கரூர் துயரத்திற்கு பிறகு தமிழகத்தில் தவெக உட்பட எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ, பொது கூட்டங்களுக்கு அனுமதி கிடைப்பது சிக்கலான ஒன்றாக மாறிவிட்டது. இதனால், புதுச்சேரியில் சென்று தனது செல்வாக்கை காட்டலாம் என விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அங்கும் அவருக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி கிடைக்கவில்லை. பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மீண்டும் அனுமதி தராத புதுச்சேரி முதல்வர்:
அந்தவகையில், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் நேற்று மீண்டும் முதல்வர் ரங்கசாமியை சந்தித்துப் பேசினார். அப்போது, அவரிடம் செய்தியாளர்கள், திட்டமிட்டபடி 9ம் தேதி தவெக பொதுக்கூட்டம் நடக்கிறதா? என்று கேட்டதற்கு, நடக்கிறது என்று மட்டும் பதிலளித்துவிட்டு சென்றார். ஏனெனில், இம்முறையும் பாதுகாப்பு காரணங்களை காட்டி, ரோடு ஷோவுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில், பொதுக்கூட்டம் நடைபெற உள்ள உப்பளம் துறைமுக மைதானத்தை சீர் செய்யும் பணியை தவெக-வினர் தொடங்கியுள்ளனர்.
பொதுக்கூட்டத்திற்கு கடும் நிபந்தனைகள்:
அதேசமயம், பொதுக்கூட்டம் நடத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளையும் போலீஸார் விதித்துள்ளதாக தெரிகிறது. அதன்படி, மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்காத பகுதியை முழுமையாக மறைக்க வேண்டும். துறைமுகம் செல்லும் சாலையை போக்குவரத்துக்கு விட வேண்டும். கூட்டத்துக்கு அதிகபட்சமாக 5,000 பேரை மட்டும் ‘கியூ.ஆர் கோடு’ முறை மூலம் அனுமதிக்க வேண்டும். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களை தயாராக நிறுத்த வேண்டும். கார்கள் வந்து செல்ல தனி வழியை ஏற்படுத்த வேண்டும், குடிநீர் வசதி உள்ளிட்டவற்றைச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை போலீஸார் விதித்துள்ளதாக தெரிகிறது.