தவெக மாநில அளவில் போராட்டம் அறிவிப்பு – விஜய் பங்கேற்பாரா?
TVK Protest : தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் திருத்தப்பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரிலும் நவம்பர் 16, 2025 அன்று மாபெரும் ஆர்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

விஜய்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் வாக்குரிமை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் நவம்பர் 16, 2025 நாளை காலை 11 மணி முதல் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறவுள்ளது. முன்னதாக இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay), எஸ்ஐஆர் திட்டத்தால் வாக்காளர்கள் அனைவருக்கும் ஒரே மாதத்தில் எஸ்ஐஆர் படிவம் எப்படி சென்று சேரும்? இந்த பணியால் அதிகம் பாதிக்கப்படப் போவது உழைக்கும் மக்கள், ஏழைகள், வேலைக்குச் செல்லும் பெண்கள்தான் என்றார்.
எஸ்ஐர் செயல்முறைக்கு எதிராக தவெக போராட்டம்
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த நடைமுறையில் பல சிக்கல்கள் உள்ளதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகமும் இந்த எஸ்ஐஆர் திட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விஜய்யும் வீடியோ வெளியிட்டு தனது எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் எஸ்ஐஆர் திட்டத்துக்கு எதிராக மாவட்ட தலைநகர்களில் போராட்டம் நடைபெறும் என தவெக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : பதிவு செய்த கட்சி என்ற அடிப்படையில்.. இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு விஜய் எழுதிய கடிதம்..
போராட்டம் அறிவித்து தவெக பதிவு
கண்டன ஆர்ப்பாட்டம்
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள், வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்கும் என்று தமிழகத்தில் இருந்து முதன்முறையாக எதிர்ப்புக் குரல் கொடுத்தது, தமிழக வெற்றிக் கழகம்தான். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்புத்…
— TVK Party HQ (@TVKPartyHQ) November 15, 2025
தவெக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள், வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்கும் என்று தமிழகத்தில் இருந்து முதன்முறையாக எதிர்ப்புக் குரல் கொடுத்தது, தமிழக வெற்றிக் கழகம்தான். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளால் வாக்காளர்கள் பெரும் குழப்பத்திலும், வாக்குரிமை பறிபோகுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.
தமிழக மக்களின் வாக்குரிமையைக் கேள்விக்குறியாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மற்றும் அது சார்ந்த குளறுபடிகளுக்கு எதிராக, நாளை 16.11.2025 காலை 11.00 மணி முதல், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கழகத் தோழர்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்க வேண்டும். கழகத் தலைவரின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று தனது அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “SIR படிவத்தை பார்த்தாலே தலை சுற்றுகிறது”.. முதல்வர் ஸ்டாலின்!!
விஜய் பங்கேற்பாரா?
இந்த ஆர்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் பங்கேற்பாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. விஜய் வீடியோ மூலம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர் பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விஜய் பங்கேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.