TVK Conference: தவெக மாநாட்டில் இளைஞர் தள்ளிவிடப்பட்ட விவகாரம்.. பொய் புகார் என குற்றச்சாட்டு!
Tamilaga Vettri Kazhagam: மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய்யை பார்க்க வந்த பாதுகாப்பை மீறி மேடைய ஏறிய தொண்டர்கள் பவுன்சர்களால் அப்புறப்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களிடம் மிகவும் ஆக்ரோஷமாக பவுன்சர்கள் நடந்து கொண்டதாக விமர்சனம் எழுந்தது. இது தொடர்பாக சரத்குமார் என்ற இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தவெக மாநாடு விவகாரம்
பெரம்பலூர், ஆகஸ்ட் 28: தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டில் இளைஞர் தள்ளி விடப்பட்ட விவகாரத்தில் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சிவகுமார் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இந்தக் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி என்னும் இடத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் ரசிகர்கள் என பலரும் வருகை தந்தனர். மாநாட்டில் கலந்து கொண்டவர்களை சந்திப்பதற்காக மேடையில் இருந்து சுமார் 800 மீட்டர் தூரத்திற்கு ரேம்ப் வாக் செல்வதற்காக பாதை அமைக்கப்பட்டிருந்தது.
தடுப்பு கம்பிகளை தாண்டிய தொண்டர்கள்
இந்தப் பாதையில் இருபுறமும் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டு அதன் மேல் ஏறி விஜய் நடந்து செல்லும் பாதையில் தொண்டர்கள் யாரும் வந்து விடக்கூடாது என முன்கூட்டியே கம்பிகளில் கிரீஸ் தடவி வைக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி தொண்டர்கள் தடுப்புக் கம்பிகள் தாண்டி ரேம்ப் வாக் செல்லும் பாதையில் விஜயை காணும் நோக்கில் ஓடி வந்தனர். ஆனால் அவரை சுற்றி இருந்தால் பவுன்சர்கள் தொண்டர்களை தடுத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதில் சில தொண்டர்களை கீழே தள்ளி விடுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் பவுன்சர்கள் தொண்டர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதை விஜய் கண்டித்ததாகவும் ஒரு தரப்பினர் வீடியோ வெளியிட்டனர்.
இந்த நிலையில் பவுன்சர்கள் தூக்கி வீசிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சரத்குமார் என்ற இளைஞர் விஜய் மற்றும் அவரது பவுன்சர்கள் 10 பேர் மீது பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக அரசால் நேரடியாக பாதிக்கப்படும் மக்கள்.. தவெக நிர்மல் குமார் குற்றச்சாட்டு!
பொய் புகார் என குற்றச்சாட்டு
இந்த நிலையில் மாநாட்டு நடைபெற்ற மேடையிலிருந்து தூக்கி வீசப்பட்டதாக சொல்லப்படும் நபர் பெரம்பலூரை சேர்ந்த சரத்குமார் இல்லை என்று அம்மாவட்ட செயலாளர் சிவகுமார் மறுத்துள்ளார். மேலும் ஏதோ நிர்பந்தத்தின் பேரில் அவர் பொய் புகார் கொடுத்துள்ளார் எனவும் சிவகுமார் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் மதுரை மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரத்குமாரை பவுன்சர்கள் தூக்கி போட்டதாக செய்திகள் வெளிவருகிறது.
உண்மையில் தூக்கி போட்டது சரத்குமார் கிடையாது. அவர் அந்த இடத்திற்கு வரவே இல்லை தனது சட்டை போன்று அணிந்திருந்த யாரோ ஒருவரை பார்த்துவிட்டு எனது அம்மா பேட்டி கொடுத்துள்ளார் என்று என்னிடம் போனின் சரத்குமார் தெரிவித்தார். நான் அவரிடம் உனக்கு ஏதும் காயம் ஏற்பட்டு விட்டதா என கேட்டேன். அதற்கு அப்படியெல்லாம் எதுவும் இல்லை என தெரிவித்தார்.
ஆனால் தற்போது யாருடைய தூண்டுதலின் பேரிலேயே சரத்குமார் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார் என கூறினார்.
இதையும் படிங்க: இவர் நேரா ஷூட்டிங்கில் இருந்து வருவாராம் – தவெக மாநாட்டில் விஜய் பேச்சு
சட்டப்படி எதிர்கொள்வோம்
அதேசமயம் தூக்கி வீசப்பட்டவர் ஒரு தொண்டர் என்ற நிலையில் அப்படி செய்யலாமா என செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பாதுகாப்பிற்காக போன்சர்கள் தள்ளிவிட்டார்கள் தவிர தூக்கி வீசவில்லை. தலைவர்களின் பாதுகாப்பு வளையத்திற்குள் வருவது தவறு. எந்த தலைவராக இருந்தாலும் பாதுகாப்பு தான் முக்கியம். மேலும் உண்மையில் கீழே விழுந்தவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அஜய்.
அவரும் பேட்டி கொடுக்கும்போது நான் தவறுதலாக அந்த இடத்திற்கு சென்று விட்டேன். நான் போய் இருக்கக் கூடாது என கூறினார். மேலும் கீழே விழுந்தவருக்கும் புகார் கொடுத்தவருக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளது. கட்சியின் வளர்ச்சியும் விஜயையும் பிடிக்காதவர்கள் இதனை தூண்டி விடுகிறார்கள். எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம் என பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் கூறியுள்ளார்.