கரூர் சம்பவத்தில் பரபரப்பு… தவெக தொண்டர் நீதிமன்றத்தில் சரண் – என்ன நடந்தது?
Karur Stampede : கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த கூட்டத்தில் தவெக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் தவெக தொண்டர் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

விஜய்
கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் அரசியல் அரங்கில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் தவெக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணை அக்டோபர் 10, அன்று விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தவெக உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார். அது குறித்து பார்க்கலாம்.
தவெக நிர்வாகி நீதிமன்றத்தில் சரண்
கரூரில் கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் பரப்புரையில் ஈடுபட்டார்.அப்போது கூட்டத்தில் நுழைந்த ஆம்புலன்ஸ் மற்றும் டிரைவரை தாக்கினர். குறிப்பாக கூட்டத்தில் மயங்கி விழுந்தவர்களை காப்பாற்ற வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கியவர்களை தேடி வந்தனர்.
இதையும் படிக்க : ‘ அண்ணனாக இருந்து எல்லாவற்றை செய்வேன்.. விரைவில் சந்திப்பேன் ‘ – வீடியோ காலில் பேசிய விஜய்..
இந்த நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய வழக்கில் சேலத்தை சேர்ந்த தவெக உறுப்பினர் மணிகண்டன் அக்டோபர் 6, 2025 அன்று முன்ஜாமின் கோரி கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனால் கரூர் நீதிமன்றத்தில் சில மணி நேரங்கள் சலசலப்பு நிலவியது. அவரது மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
ஆம்புலன்ஸ் தொடர்பான சர்ச்சைகள்
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திமுக தாங்கள் கூட்டங்களின்போது வேண்டும் என்றே காலியான ஆம்புலன்ஸை அனுப்பி பாதிப்பை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். காலியாக உள்ள ஆம்புலன்ஸ்களை அக்கட்சியின் தொண்டர்கள் தாக்கும் சம்பவங்களும் நடந்தன.
இதையும் படிக்க : கரூர் சம்பவம்.. சிபிஐ விசாரணை கோரிய மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம்!
ஆம்புலன்ஸ் தாக்கப்பட்டால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தாக்கப்ப்டடால் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் இது தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.