தொடரும் சோகம்.. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி மேலும் ஒருவர் உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு..

Karur Stampede: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்பது 41 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 50 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும் சோகம்.. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி மேலும் ஒருவர் உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு..

கோப்பு புகைப்படம்

Published: 

29 Sep 2025 07:38 AM

 IST

கரூர், செப்டம்பர் 29, 2025: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், 27 செப்டம்பர் 2025 அன்று கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். காலை 12 மணியளவில் பிரச்சாரம் ஆரம்பிக்க இருந்த நிலையில், மாலை 7 மணியளவில் தான் அவர் பரப்புரை நடைபெறும் இடத்திற்கு சென்று சேர்ந்தார். நேரம் ஆக ஆக அங்கு இருந்த மக்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் பிரச்சார வாகனம் பரப்புரை நடைபெறும் இடத்திற்கு செல்வதற்கே ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டது.

நடந்தது என்ன?

பின்னர் அவர் பிரச்சாரம் மேற்கொண்டபோது தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடந்தன. அங்கு இருந்த மக்கள் மயங்கி விழங்க தொடங்கினர். மேலும் பல்வேறு ஆம்புலன்ஸ்களும் அந்த வழியாக செல்லத் தொடங்கின. அங்கு இருந்த மக்கள் தண்ணீரின்றி தவித்த காரணத்தால், விஜயின் பிரச்சார வாகனத்திலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டது.

Also Read: விஜய் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல் – நிபுணர்கள் தீவிர சோதனை

இத்தகைய சூழ்நிலையில் விஜய் தனது உரையை முடித்த பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் மக்கள் பல மணி நேரம் காத்திருந்த நிலையிலேயே வெளியேற வேண்டும் என்ற அவசரத்தில் அங்கிருந்து அலைமோதினர். இதனால் பயங்கரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலரும் அங்கேயே உயிரிழந்தனர்.

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை:

இந்த சூழலில், செப்டம்பர் 28, 2025 அன்று மாலை, மேலும் ஒரு இளைஞர் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. மேலும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 65 வயதுடைய சுகுணா என்ற பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததால் தற்போது பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

Also Read: கரூர் கூட்ட நெரிசல்.. ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்..

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம்:

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு தரப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு தரப்பில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.