ரயில் விபத்து: ‘உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்

TVK Vijay Seeks Action : கடலூரில் பள்ளி பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த நிகழ்வு தமிழ்நாடு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்து: உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்

ரயில் விபத்து குறித்து விஜய் இரங்கல்

Updated On: 

08 Jul 2025 19:36 PM

கடலூர் (Cuddalore) மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ஜூலை,08, 2025 அன்று காலை நிகழ்ந்த ஒரு பயங்கர ரயில் விபத்தில், பள்ளி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மாணவர்களை ஏற்றிச்சென்ற பள்ளி வாகனம் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த ரயில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது ரயில் வேனை 50 மீட்டர் வரை இழுத்து சென்றது.  இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அலிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இந்த விபத்துக்கு குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay) தனது எக்ஸ் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அவரது பதிவில், விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

விபத்து நடைபெற்ற பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க முடிவெடுத்தும் அதற்கு ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே, விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்  தொடர்பாக தவெக தலைவர் விஜய்யின் எக்ஸ் பதிவு

 

விபத்து குறித்து பள்ளி வேன் டிரைவர் விளக்கம்

 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி வேன் டிரைவர் சங்கர் விபத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நான் கேட் கீப்பரிடம் பேசவே இல்லை. அப்போது அவர் இந்த இடத்தில் இல்லவே இல்லை. நான் அந்த வழியாக ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது கேட் திறந்தது தான் இருந்தது. அதனால் ரயில் வருவது குறித்து எனக்கு தெரியாது என்றார்.

கேட் கீப்பரின் அலட்சியத்தால் உயிரிழப்பு?

விபத்துக்குப் பிறகு, அப்பகுதி பொதுமக்கள் கேட் கீப்பரின் மீது கடும் கோபம் தெரிவித்தனர். அவரால் ரயில்வே கேட் சரியாக மூடப்படவில்லை என்றும், சம்பவத்தின்போது தூங்கிக் கொண்டிருந்ததாகவும், இதுவே விபத்துக்குக் காரணம் என்றும் கூறுகின்றனர். ஆனால் தெற்கு ரயில்வே இதனை மறுத்துள்ளது. ரயில்வே கேட்டை திறக்க வேண்டும் என பள்ளி பேருந்து ஓட்டுநர் கேட் கீப்பரிடம் வலியுறுத்தினார் என்றும் விளக்கமளித்துள்ளது.