Bahujan Samaj Party: பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கின் புதிய கட்சிக்கு எதிராகவும் வழக்கு.. பகுஜன் சமாஜ் கட்சி அறிவிப்பு..!
Porkodi Armstrong's New Party: முன்னாள் BSP மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கிய புதிய கட்சியின் கொடியில் யானைச் சின்னம் பயன்படுத்தப்பட்டதால், BSP கட்சி வழக்கு தொடர உள்ளதாக அறிவித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொல்லப்பட்டார். அவரது மனைவி புதிய கட்சியைத் தொடங்கியதற்கும், கட்சிக் கொடியில் உள்ள யானை சின்னத்திற்கும் BSP எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூலை 7: முன்னாள் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் (Bahujan Samaj Party) மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி (Porkodi Armstrong) தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு எதிராக பகுஜன் சமாஜ் வழக்கு தொடர இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கடந்த 2025 ஜூலை 5ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் நடைபெற்றது. அந்த நாளில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி புதிதாக தமிழ்நாடு பகுஜன் சமாஜ் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். அன்றைய நாளில் வெளியிடப்பட்ட கொடியில் நீல நிறத்தில் யானை பேனாவை தூக்குபிடிப்பது போன்ற படம் இடம்பிடித்திருந்தது. இந்தநிலையில், தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிராக வழக்கு தொடர போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
என்ன காரணம்..?
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் 2 யானை இடம்பெற்றுள்ளது. இதனை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி யானை இடம்பெற்றுள்ளதாக தொடரப்பட்ட வழக்கானது, சென்னை முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று அதாவது 2025 ஜூலை 7ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடங்கிய கட்சியின் கொடியிலும் யானை படம் இருப்பதாக தெரிவித்தனர்.




புதிய கட்சியின் கொடி அடையாளம்:
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி!!
பொற்கொடி ஆர்ம்ஸ்ட்ராங் தலைமையில் புதிய அரசியல் கட்சி தொடக்கம்.
TAMIL MAANILA BAHUJAN SAMAJ KATCHI”
Under the leadership of Porkodi Armstrong (wife of the late Armstrong, BSP Tamilnadu Leader) a political party is born today in Tamilnadu. pic.twitter.com/04T2X4RCTT
— JAIBHIM PORKO ஜெய்பீம் பொற்கோ (@Porkoelumalai) July 5, 2025
இதற்கு பதிலளித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆனந்தன் நீதிமன்றத்தில், “பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், யாருடைய அனுமதியும் இல்லாமல் பகுஜன் சமாஜ் என்ற பெயரை பயன்படுத்தியுள்ளார். மேலும், கட்சி கொடியில் யானை சின்னத்தையும் பயன்படுத்தியுள்ளார். எனவே, இதுதொடர்பாக வழக்கு தொடர இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு எதிராகவும் வழக்கு தொடரப்படும் என பகுஜன் சமாஜ் தரப்பு பதில் அளித்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை வருகின்ற 2025 ஜூலை 11ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.