தண்ணீர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து.. ஓட்டுநர் உட்பட 2 பேர் உயிரிழந்த சோகம்..
Bus Collides With Lorry: மதுரையில் இருந்து குளிர்சாதன அரசு பேருந்து திருச்செந்தூருக்கு புறப்பட்டது. இந்தப் பேருந்தில் மொத்தம் 25 பயணிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர். மாலை 4.30 மணியளவில் மதுரை – தூத்துக்குடி தேசிய நான்கு வழிச்சாலையில் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை சமத்துவபுரம் பகுதியில் நின்றுகொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதி விபத்துகுள்ளானது.

கோப்பு புகைப்படம்
தூத்துக்குடி, நவம்பர் 7, 2025: எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை சமத்துவபுரம் பகுதியில் அரசு பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்; பலரும் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரையில் இருந்து நேற்று பிற்பகல், அதாவது நவம்பர் 6, 2025 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் குளிர்சாதன அரசு பேருந்து திருச்செந்தூருக்கு புறப்பட்டது. இந்தப் பேருந்தில் மொத்தம் 25 பயணிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர். மாலை 4.30 மணியளவில் மதுரை – தூத்துக்குடி தேசிய நான்கு வழிச்சாலையில் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை சமத்துவபுரம் பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தது.
தண்ணீர் லாரி மீது மோதிய அரசு பேருந்து:
அப்போது சாலையோரம் பழுதடைந்து நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரியின் மீது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மோதியது. பேருந்தின் முன்பகுதி முழுவதுமாக நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் நல்லசாமி மற்றும் பேருந்தில் பயணித்த மும்பையைச் சேர்ந்த மகேஷ் ஆகியோர் கடுமையாக காயமடைந்தனர். அதே சமயம், பேருந்தில் பயணம் மேற்கொண்ட பலரும் படுகாயம் அடைந்தனர்.
மேலும் படிக்க: பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கு ரூ.20 லட்சம் டெபாசிட்? அரசு பரிந்துரைக்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு!!
இந்த விபத்துக்குப் பிறகு அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அதே சமயம், தீயணைப்பு துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இரண்டு பேர் உயிரிழந்த சோகம்:
இதில் மகேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே சமயம், பேருந்து ஓட்டுநர் நல்லசாமி மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் ஏழு பேருக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் படிக்க: அடுத்தடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. நவ.15 பிறகு மீண்டும் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. வானிலை நிலவரம்..
இது குறித்து எட்டயபுரம் காவல்துறை துணை ஆய்வாளர் செந்தில் வேல்முருகன் தலைமையில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தின் காரணமாக அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக தண்ணீர் லாரி ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த மகேஷ் என்பவர் மும்பையைச் சேர்ந்தவர். அவர் திருச்செந்தூருக்கு மனைவியுடன் செல்வதற்காக வந்திருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.