விஜய் தலைமையில் புதிய கூட்டணி – டிடிவி தினகரன் சொன்ன சீக்ரெட்
TTV Dhinkaran : 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுககு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் பரபரப்பாகியிருக்கிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், விஜய் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்றார்.

விஜய் - டிடிவி தினகரன்
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியிருக்கிறது. புதிதாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் (Tamilaga Vettri Kazhagam) இந்த தேர்தலில் களமிறங்கவிருப்பதால் இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. தற்போது வரை திமுக (DMK) கூட்டணி, பாஜக, அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி , சீமான் (Seeman) தலைமையிலான நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இதுவரை எந்த கூட்டணியிலும் இணையாமல் இருக்கின்றன. இதனால் தமிழகத்தில் புதிய அணிகள் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் தலைமையில் கூட்டணி?
அதிமுக, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் திடீரென அந்த கூட்டணியில் இருந்து விலகினார். அவரது அடுத்த கட்ட திட்டம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், அக்டோபர் 18, 2025 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விஜய் தலைமையில் புதிய கூட்டணி உருவாக வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி இருக்கும். திமுக தலைமையிலான கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, விஜய் தலைமையிலான கூட்டணி, சீமான் தனித்து நிற்கிறார். இதனால் 4 முனை போட்டி நிலவும். எதிர்பாராத கூட்டணி உருவாக வாய்ப்பிருக்கிறது என்றார்.
இதையும் படிக்க : தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல… தேர்தல் ஆணையம் அறிவிப்பு – என்ன நடந்தது?
பாஜக – அதிமுக கூட்டணியில் விஜய் ?
கடந்த சில நாட்களாக அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய் இணையவிருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. மற்றொரு பக்கம் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய மாட்டார் என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் தவெக கொடிகள் காணப்பட்டது பெரும் சர்ச்சையானது. அதற்கு ஏற்ப கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
இதையும் படிக்க : 19 நாட்களுக்கு பின் பனையூர் சென்ற விஜய்.. நிர்வாகிகளுடன் சந்தித்து பேசியது என்ன?
இப்படி விஜய்யை சுற்றி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், விஜய் இதுவரை அமைதியாகவே இருக்கிறார். அவரது அடுத்த கட்ட திட்டம் என்னவாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கரூர் சம்பவம் நடைபெற்று 17 நாட்களுக்கு பிறகு பனையூரில் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்த அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். விரைவில் அவரது அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.