Tirunelveli Honour Killing: திருநெல்வேலி ஆணவக் கொலை.. கவினின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்..!

Tamil Nadu CM MK Stalin Condolences: திருநெல்வேலியில் இடைநிலை சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் கவின் செல்வ கணேஷ் ஆணவக் கொலையில் கொல்லப்பட்டார். இதனால் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார்.

Tirunelveli Honour Killing: திருநெல்வேலி ஆணவக் கொலை.. கவினின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்..!

கவின் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published: 

04 Aug 2025 15:03 PM

தூத்துக்குடி, ஆகஸ்ட் 4: திருநெல்வேலியில் இடைநிலை சமூகத்தை சேர்ந்த ஒரு இளைஞரால், பட்டியலினத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வ கணேஷ் என்பவர் ஆணவக் கொலை (Tirunelveli Honour Killing) செய்யப்பட்டார். இதையடுத்து, தமிழ்நாட்டின் பெரும்பாலான முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அந்த கொடூரமான கொலைக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட கவினின் குடும்பத்திற்கு ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) ஆறுதல் தெரிவித்துள்ளார்.

தலைவர்கள் கண்டனம்:

முன்னதாக, கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்டதாக செய்தி வெளியானதும், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் புதிய தமிழகத் தலைவர் கே. கிருஷ்ணசாமி ஆகியோர் தங்களது கண்டனங்களை வெளியிட்டனர். தொடர்ந்து திருமாவளவனும், சீமானும் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என தெரிவித்தனர். அதேபோல், கிருஷ்ணசாமி, திருமாவளவன் ஆகியோர் தங்களது கட்சி சார்பில் போராட்டத்தை நடத்தினர்.

ALSO READ: தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலையை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்..

இவர்களுக்கு பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக் மாநிலத் தலைவரும், திருநெல்வேலி எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார நிர்வாகத்திற்கான பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா அறிக்கை வெளியிட்டனர்.

ஆணவக் கொலை நடந்தது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் இந்திய யூனியன் லீக் தலைவர் கே.எம். காதர் மொஹிதீன் உள்ளிட்ட திமுக கூட்டணித் தலைவர்கள் எந்த விதமான அறிக்கையையும் வெளியிடவில்லை என்று குற்றசாட்டு எழுந்தது. இந்தநிலையில், திருநெல்வேலியில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார்.

கொலைக்கான காரணம்:

தூத்துக்குடியை சேர்ந்த கவின் செல்வகணேஷூம், திருநெல்வேலியை சேர்ந்த பெண் சித்த மருத்துவரும் காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெண் மருத்துவரின் தம்பியான சுர்ஜித், தனது அக்காவின் காதலன் கவினை வெட்டிக் கொலை செய்து காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

ALSO READ: சர்வாதிகார, சனாதான சங்கிலிகளை நொறுக்கி தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி தான் – கமல்ஹாசன்..

இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் சுர்ஜித் மற்றும் அவர்களது பெற்றோரான சரவணன் மற்ரும் கிருஷ்ணகுமாரியை கைது செய்தனர். இவர்கள் இருவரும் காவல் உதவி ஆய்வாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.