திருப்பரங்குன்றம் விவகாரம்.. தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க தடை!!

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சதீஷ்குமார் தலைமையிலான அமர்வு, மிக முக்கியமான சில கருத்துக்களைப் பதிவு செய்தது. அதன்படி, நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம், இந்த விவகாரம் உணர்வுப்பூர்வமானது மற்றும் மிகப்பெரிய சட்டப் பின்னணி கொண்டது. எனவே இதனை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது என்றனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம்.. தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க தடை!!

கோப்புப் புகைப்படம்

Updated On: 

08 Apr 2026 14:19 PM

 IST

மதுரை, ஏப்ரல் 08: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தர்கா அருகே உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று ஒரு மிக முக்கியமான இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இந்த விவகாரத்தில் மேற்கொண்டு வரும் நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட அனைத்து விசாரணைகளுக்கும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை விதித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்கா அருகே அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று ராமர், ரவிக்குமார் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இதையும் படிக்க: “ஸ்டாலின் தான் வந்தாரு; நீச்சல் அடிக்க விட்டாரு”.. வேளச்சேரி பரப்புரையில் இபிஎஸ் விளாசல்!!

தனி நீதிபதியின் நடவடிக்கை:

இந்த உத்தரவை எதிர்த்து மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, குறிப்பிட்ட இரண்டு இடங்களிலுமே தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது. மேற்கண்ட உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று கூறி தனி நீதிபதியிடம் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை உடனடியாக விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அரசு மற்றும் தர்கா தரப்பு வாதங்கள்:

தனி நீதிபதியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ள நிலையில், தனி நீதிபதி அதே விவகாரத்தில் மீண்டும் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பிப்பது சட்டப்படிச் சரியல்ல. தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மாதிரித் தூணில் தீபம் ஏற்றி, “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நிச்சயம் தீபம் ஏற்றப்படும்” என்று பேசியுள்ளார். இது ஒரு நீதிபதிக்குரிய நடுநிலைத் தன்மையை மீறும் செயல். எனவே அவர் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என தர்கா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மோகன் முன்வைத்தார்.

இருவர் அமர்வின் அதிரடி உத்தரவு:

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சதீஷ்குமார் தலைமையிலான அமர்வு, மிக முக்கியமான சில கருத்துக்களைப் பதிவு செய்தது. அதன்படி, நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம், இந்த விவகாரம் உணர்வுப்பூர்வமானது மற்றும் மிகப்பெரிய சட்டப் பின்னணி கொண்டது. எனவே இதனை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது. இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு உத்தரவை வழங்கிய பிறகு, அதே விவகாரத்தில் தனி நீதிபதி எவ்வாறு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க முடியும் என்ற சட்டப்பூர்வமான கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிக்க: பச்சை பொய் பழனிசாமி ஆட்சியில் தமிழகம் சீரழிந்திருந்தது… முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

தனி நீதிபதி விசாரணைக்குத் தடை:

இந்த வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு மீண்டும் விசாரித்து இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. மேலும் அவர் இதுநாள் வரை பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. தனி நீதிபதியின் விசாரணைக்குத் தடை விதித்ததோடு, இந்த வழக்கின் விரிவான விசாரணையை வரும் ஜூன் மாதம் ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?