வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம்.. நவம்பர் மாத பயன்பாட்டிற்கு வரும் என தகவல்..

Velachery - St Thomas Mount MRTS Project: வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையே இருக்கக்கூடிய பறக்கும் ரயில் பணிகள் 85 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்ட பின்பு இந்த வழித்தடத்தில் ரயில் சேவை செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம்.. நவம்பர் மாத பயன்பாட்டிற்கு வரும் என தகவல்..

கோப்பு புகைப்படம்

Published: 

20 Jul 2025 09:12 AM

சென்னை, ஜூலை 20, 2025: வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை அமைய இருக்கும் பறக்கும் ரயில் திட்டத்தின் பணிகள் 85 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும், 2025 நவம்பர் மாதம் முழுமையாக பணிகள் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்த பறக்கும் ரயில் மூலம் தினசரி ஏராளமான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக அலுவலகம் செல்லும் மக்கள் இந்த வழித்தடத்தை பெரும்பாலும் பயன்படுத்துகின்றன. சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பாக இந்த பறக்கும் ரயில் திட்டம் செயல்பட்டு வருகிறது. சென்னை வேளச்சேரியில் புறப்படக்கூடிய பறக்கும் ரயிலானது தரமணி, பெருங்குடி, இந்திரா நகர், அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர், முண்டககன்னி அம்மன் கோயில், லைட் ஹவுஸ், பசுமை வழி சாலை போன்ற வழித்தடங்கள் மூலம் கடற்கரை வரை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 15 நிமிட இடைவெளியில் ஒவ்வொரு ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம்:

சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இருந்த இந்த ரயில் திட்டத்தை நீட்டிக்கும் வகையில் வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. மூன்றாவது கட்டமாக ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பாதை அமைக்கும் பணி 2008 ஆம் ஆண்டு ரூபாய் 495 கோடி மதிப்பீட்டில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஐந்து கிலோ மீட்டர் வரை இருக்கும் இந்த பாதை பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் இந்த பாதையில் பறக்கும் ரயில் அமைத்தால் பொதுமக்களுக்கு சிக்கலாகும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

15 ஆண்டுகளுக்கு பின் தொடங்கப்பட்ட பணிகள்:

இந்த வழக்கு சுமார் 15 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது. பின்னர் அதனைத் தொடர்ந்து இந்த பணிகள் மேற்கொள்வதற்காக அனுமதி வழங்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் மீண்டும் சென்னை வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையில் இருக்கக்கூடிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பாலத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

Also Read: மனைவி உயிரிழந்த சோகம்.. ஒரு வருடமாக மன உளைச்சலில் இருந்த முதியவர் விபரீத முடிவு!

85 சதவீத பணிகள் நிறைவு:

பின்னர் இதனை முறையாக சரி செய்து எஞ்சியிருந்த ஆதம்பாக்கம் முதல் பரங்கிமலை வரை இருக்கக்கூடிய அரை கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தூண்கள் அமைத்து பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சென்னை வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையில் இருக்கக்கூடிய பகுதிகளில் இரயில் நிலையங்கள் அதாவது ஆதம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு அதற்கான பெயர் பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: பாளையங்கோட்டை: பழைய ரூ.100 நோட்டு செல்லுமா? செல்லாதா? ரேஷன் கடையில் வாங்க மறுப்பு

இந்த பணிகள் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில் வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையே இருக்கக்கூடிய பறக்கும் ரயில் பணிகள் 85 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்ட பின்பு இந்த வழித்தடத்தில் ரயில் சேவை பொதுமக்களுக்காக செயல்பாட்டிற்கு வரும் எனவும் அதிகபட்சமாக 2025 நவம்பர் மாதம் இறுதியில் இந்த சேவை தொடங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்