வீடுகளில் அனுமதியின்றி கூட்டுப் பிரார்த்தனை நடத்தக்கூடாது.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
Chennai High Court: பிரார்த்தனைகள், வீட்டின் நான்கு சுவர்களுக்குள் மட்டும் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது எனக் குறிப்பிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஜூலை 17, 2025: மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்த கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, குரோம்பேட்டையில் உள்ள ராதாநகர், கிருஷ்ணமாச்சாரி தெருவில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவரின் வீட்டில் தெய்வீகத்துக்கான சர்வதேச அமைப்பு என்ற அமைப்பின் சார்பில் இந்து கடவுள்களின் பெயர்களை உச்சரிக்கும் நாம சங்கீர்த்தனம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருவதாகவும், இது அந்த பகுதியில் குடியிருப்பவர்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதாகக் கூறி, அந்த பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அனுமதியின்றி கூட்டுப் பிரார்த்தனை நடத்தக்கூடாது:
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கன்னியாகுமரி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் அனுமதியில்லாமல் குடியிருப்பு பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, சட்டம் அனைவருக்கும் சமம்.
மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்த கூடாது எனவும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி குடியிருப்பு பகுதியில் நாம சங்கீர்த்தனம் நடத்தக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
பிரார்த்தனை இடையூறாக இருக்க கூடாது:
மேலும் அந்த உத்தரவில், சிலரின் காதுகளுக்கு தெய்வீகமாக விளங்கும் இசை, மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும். அமைதியான முறையில் பிரார்த்தனை செய்வது தான் சிறந்த பிரார்த்தனை. இந்த உண்மையை மக்கள் உணர வேண்டும்.
Also Read: மாறுது வானிலை.. கனமழை பெய்ய வாய்ப்பு
சப்தமாக கடவுளை பிரார்த்தித்து, மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். பிரார்த்தனைகள், வீட்டின் நான்கு சுவர்களுக்குள் மட்டும் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது எனக் குறிப்பிட்ட நீதிபதி, இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என, சிட்லபாக்கம் போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.