சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இணையும் பறக்கும் ரயில் திட்டம்.. முதற்கட்ட ஒப்புதல்..

MRTS - CMRL: சென்னையில் பல ஆண்டுகளாக மக்கள் சேவைக்காக பறக்கும் ரயில் திட்டம் சென்னை வேளச்சேரியில் இருந்து கடற்கரை வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பறக்கும் ரயில் சேவை சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க முதல் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இணையும் பறக்கும் ரயில் திட்டம்.. முதற்கட்ட ஒப்புதல்..

கோப்பு புகைப்படம்

Updated On: 

02 Aug 2025 07:50 AM

சென்னை, ஆகஸ்ட் 2, 2025: சென்னையில் மக்களின் வசதிக்காக சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரையில் புறநகர் ரயில் சேவையான பறக்கும் ரயில் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த பறக்கும் ரயில் திட்டம் மூலம் தினசரி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 1997 ஆம் ஆண்டு முதல் இந்த பறக்கும் ரயில் திட்டமானது செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த பறக்கும் ரயில் சேவை மெட்ரோ ரயில் உடன் இணைக்க முதல் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறக்கும் ரயில் சேவை என்பது சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரையில் பல்வேறு பகுதிகளை இணைக்க கூடிய ஒன்றாகும்.

பறக்கும் ரயில் விரிவாக்க பணிகள்:

வேளச்சேரியிலிருந்து புறப்படும் ரயில் என்பது பெருங்குடி, தரமணி, அடையாறு, காந்திநகர், இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர், மந்தைவெளி, மயிலாப்பூர், பசுமை வழி சாலை, லைட் ஹவுஸ், முண்டககன்னி அம்மன் கோயில் வழியாக கடற்கரை வரை இயக்கப்படுகிறது. இந்த நிலையில் வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரிவாக்க பணிகள் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டால் அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்படும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு முடிவில் விரிவாக்க பணிகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை வரையிலான விரிவாக்க திட்டத்தில், ரயில் நிலையங்கள் கட்டமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த விரிவாக்க பணிகளில் 80 சதவீத பணிகள் முடிவடைந்ததாகவும் இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் 2025 நவம்பர் மாதம் முதல் இந்த சேவை மக்களுக்கு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஆகஸ்ட் 7ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. தென்காசி ஆட்சியர் அறிவிப்பு!

பறக்கும் ரயில் திட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பாலான ரயில் நிலையங்கள் பராமரிப்பு இன்றி போதிய மக்கள் வசதி இன்றி இருப்பதாக தொடர்ந்து மக்கள் தரப்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பறக்கும் ரயில் சேவை பணிக்கு ஆண்டுக்கு 104 கோடி ரூபாய் செலவிடப்படுவதாகவும் அதில் இருந்து வருவாய் வெறும் 60 கோடி ரூபாய் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பறக்கும் ரயில் சேவை – மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஒப்புதல்:

மேலும் கடற்கரை வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என பலதரப்பு கோரிக்கைகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து பறக்கும் ரயில் சேவை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அரசு தரப்பில் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக 2025 ஜூலை 16ஆம் தேதி ரயில்வே அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த நிலையில் பறக்கும் ரயில் சேவையை, சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் திட்டத்திற்கு ரயில்வே வாரிய முதல் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தென் மாவட்ட ரயில்களில் போக்குவரத்து மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அதிநவீன வசதிகள் – கூடுதல் சேவைகள்:

அதன்படி பறக்கும் ரயில் சேவை திட்டத்தின் சொத்து விவரங்கள், ரயில் இயக்கம், பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவை தமிழக அரசின் கீழ் இருக்கக்கூடிய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். அப்படி மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டால் மக்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிய அம்சங்கள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் சேவை திட்டம் என்பது நகரின் பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக இயக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் தயாரிக்கப்பட உள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.