விஷம் வைத்து 50 மயில்கள் சாகடிப்பு.. தென்காசியில் நடந்த அதிர்ச்சி..
Peacock Poisoned and Killed: தென்காசி மாவட்டத்தில் விளை நிலத்தில், மயில்கள் அந்த எலி மருந்து கலந்த மக்காச்சோளத்தை உண்டுள்ளன. இதைத் தொடர்ந்து, மயில்கள் சிறிது நேரத்திலேயே ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோப்பு புகைப்படம்
தென்காசி, அக்டோபர் 26, 2025: தென்காசி மாவட்டத்தில் 50 மயில்கள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மயில்களை வேட்டையாடுவது, அதனை கொல்வது அல்லது மயில் கறியை சமைத்து சாப்பிடுவது உள்ளிட்டவை சட்டவிரோதமாக கருதப்படுகிறது. இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை வனத்துறையினர் உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய எந்த ஒரு செயலும் பொதுமக்கள் மேற்கொள்ளக்கூடாது. ஆனால், தென்காசி மாவட்டத்தில் ஏராளமான மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
தென்காசி மாவட்டம் குருவிக்குளத்தில் யூனியன் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகப் பகுதியில் தினசரி ஏராளமான மயில்கள் வருவது வழக்கமானது. இந்த அலுவலகத்திற்கு பின்னால் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்ற நபர் விவசாய நிலம் வைத்துள்ளார். அந்த விவசாய நிலத்தில் சமீபத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். ஆனால், அந்த பகுதியில் மயில்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், அவை அடிக்கடி வயலில் நுழைந்து பயிர்களை தின்றுவந்தன.
மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல்.. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ.. ஏ1, ஏ2, ஏ3 லிஸ்டில் யார் பெயர்?
விஷம் கலந்த பயிர்களை வைத்த ஜான்சன்:
இதனால், நன்கு வளர்ந்து வந்த பயிர்கள் சேதமடையக் கூடாது என்ற நோக்கத்தில், ஜான்சன் தனது ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் எலி மருந்து கலந்த மக்காச்சோளத்தை தூவியிருந்தார். அங்கு தினசரி வருவதைப் போல, மயில்கள் அந்த எலி மருந்து கலந்த மக்காச்சோளத்தை உண்டுள்ளன. இதைத் தொடர்ந்து, மயில்கள் சிறிது நேரத்திலேயே ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்துள்ளன. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக புளியங்குடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் – நயினார் நாகேந்திரன்..
50 மயில்கள் உயிரிழப்பு:
விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், அங்கு ஏராளமான மயில்கள் உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 50 மயில்கள் விஷம் கலந்த மக்காச்சோளம் உண்டதால் உயிரிழந்திருந்தன. இதையடுத்து கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், அதே இடத்தில் மயில்கள் அனைத்தும் குழி தோண்டி புதைக்கப்பட்டன. சட்டவிரோதமாக 50 மயில்களை விஷம் கலந்த பயிர்கள் மூலம் கொன்ற ஜான்சன் என்பவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.