போராட்டத்தின்போது சாலையின் தடுப்புகள் சேதம் – சரிசெய்ய அனுமதி கேட்டு தவெக கடிதம்!
TVK Seeks Civic Permission : தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் சிவானந்தா சாலையின் தடுப்புகள் சேதமடைந்தன. இதனை தாங்களே சரி செய்து தருகிறோம், அதற்கு அனுமதி தாருங்கள் என சென்னை மாநகராட்சிக்கு தவெக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

சென்னை, ஜூலை 14, 2025 – காவல் நிலையங்களில் நடந்த சந்தேகத்துக்குரிய மரணங்களை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) சார்பில் சென்னையில் ஜூலை 14, 2025 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சித் தலைவர் விஜய் (Vijay), காவல்துறையினரின் தவறான நடவடிக்கையால் உயிரிழந்த 24 குடும்பங்களுக்கும் முதல்வர் மன்னிப்புக் கூற வேண்டும் என வலியுறுத்தினார். இந்தப் போராட்டத்தின் போது சிவானந்தா சாலையின் நடுவே இருந்த தடுப்புகள் சேதமடைந்தன. இதுகுறித்து சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகி விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில் இதனை தாங்களே சரி செய்வதாகவும், அதற்கு தங்களுக்கு அனுமதி அளிக்கவேண்டும் எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) சார்பில் சென்னை மாநகாரட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தவெக சார்பில் அனுமதி கேட்டு மாநகராட்சிக்கு கடிதம்
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், சிவானந்தா சாலையில் நடைபெற்ற தவெக ர்ப்பாட்டத்தில் சேதமடைந்த சென்டர் மீடியனில் உள்ள தடுப்புகள் மற்றும் கம்பிகளை நாங்களே சரி செய்து தருகிறோம். உரிய அனுமதி கொடுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது நல்ல முன்னுதாரணம் எனக் கூறி பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : 24 குடும்பங்களிடமும் முதலமைச்சர் சாரி கேட்க வேண்டும் – த.வெ.க தலைவர் விஜய்




தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், லாக் அப் மரணங்களில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நேரில் பங்கேற்றனர். கருப்பு சட்டை அணிந்து கையில் SORRY என்ற பதாகையை ஏந்தி வந்த விஜய், தனது உரையில், “மடப்புரம் இளைஞர் அஜித் குமாரின் மரணத்திற்கு முதல்வர் மன்னிப்புக் கேட்டார். இது பாராட்ட வேண்டிய செயலாக இருந்தாலும், அதே நேரத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் விசாரணையின் போது உயிரிழந்த 24 குடும்பங்களிடமும் அதே முறையில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சாரிமா மாடல் அரசு என விமர்சனம்
திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த விஜய், இது ‘சாரி மா மாடல் அரசு ஆகி விட்டது. எதற்கும் பதிலளிக்காமல், வெறும் சாரி சொல்லிவிடும் ஆட்சி இது. காவல்துறையின் தவறுகளை சரி செய்யாமல் விட்டால், நாங்கள் மக்களோடு சேர்ந்தே மாற்றத்தை ஏற்படுத்துவோம்,” என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிக்க : லாக் அப் மரணங்கள்.. பனையூருக்கு வந்த 21 குடும்பத்தினர்.. விஜய் சந்திப்பு!
மேலும் அவரது உரையில், சாத்தான்குளம் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது குறித்து, “அப்போது நீங்கள் அவமானம் என்று கூறினீர்கள். இப்போது அஜித் குமார் வழக்கில் என்ன நடந்தது? இது அவமானம் இல்லையா?” என முதல்வரை நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.