தந்தை பெரியாரை அவமதித்தோ, அறிஞர் அண்ணாவை… – தவெக தலைவர் விஜய் எச்சரிக்கை!
Vijay on BJP alliance : தமிழக வெற்றி கழக செயற்குழு கூட்டத்தில், வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டார். இந்த நிகழ்வில் பேசிய தவெக தலைவர் விஜய், பாஜகவுடன் எந்த வகையிலும் கூட்டணி இல்லை என்றும், விவசாயிகள் நலனுக்காக உறுதியுடன் நிற்போம் என்றும் பேசினார்.

தவெக தலைவர் விஜய்
தமிழக வெற்றி கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) தலைமை செயற்குழு கூட்டம் ஜூலை 4, 2025 அன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சி தலைவர் விஜய் (Vijay) தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், மற்றும் சார்பு அணிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், 2025 ஆகஸ்ட் மாதம் மாநில அளவிலான மாநாடு நடைபெறும் என்றும், 2025 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மாநிலமெங்கும் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்பதையும் செயற்குழு தீர்மானமாக அறிவித்தது.
இந்த நிலையில் நிகழ்வில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ”கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி மக்களிடையே வேற்றுமையை விதைத்து அதில் குளிர் காய நினைக்கிறது பாஜக. அவர்களின் இந்த விஷமத்தனமான வேலைகள், வேறு எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம், ஆனால் தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது. சமூக நீதியும் நல்லிணக்கமும், சகோதரத்துவமும், சமத்துவமும் ஆழமாய் வேறூண்றிய மண் இந்த தமிழ் நாட்டு மண்.
செயற்குழு கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசிய வீடியோ
Full speech of Thalapathy @TVKVijayHQ 😎😎#TVK #TVKVijay#TVKForTN2026pic.twitter.com/JZ26DEQh65
— VOICE OF TVK (@VoiceOfTVK_) July 4, 2025
எனவே இங்கு தந்தை பெரியாரை அவமதித்தோ, அறிஞர் அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ அல்லது தமிழ் நாட்டின் மதிப்பிற்குரிய தலைவர்களை வைத்தோ அரசியல் செய்ய நினைத்தால் அதில் பாஜக ஒருபோதும் வெற்றிபெறவே இயலாது. சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூட்டணிக்கு போக திமுகவோ, அதிமுகவோ இல்லை நம் தமிழக வெற்றிக்கழகம். கூட்டணி என்றாலும் திமுக, பாஜகவுக்கு எதிரான கூட்டணியாகத் தான் இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வாழ்வாதாரத்துக்கு அடிப்படை காரணமானவர்கள் விவசாயிகள். அவர்கள் பக்கம் நாம் நிற்போம்.
பரந்தூர் மக்களை சமீபத்தில் சந்தித்தேன். அவர்கள் பேசும்போது கஷ்டமாக இருந்தது. சாதி மதம் கடந்து தங்களது வாழ்வாதாரத்தை விவசாய பூமியை, நீர் நிலைகளை காப்பாற்ற ஒன்றாக நின்று போராடிக்கொண்டிருக்கிற பரந்தூர் மக்களை தயவு செய்து நேரடியாக முதல்வர் சந்தித்து, அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்ற உறுதி மொழி அளிக்க வேண்டும். இதை செய்யத் தவறினால், பரந்தூர் மக்களை நானே நேரடியாக தலைமை செயலகத்தில் உங்களை சந்தித்து முறையிடுகிற நிலைமை உண்டாகும். அப்படி ஒரு சூழல் வந்தது என்றால் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.