தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை.. மயிலாடுதுறை அருகே அதிர்ச்சி..
Crime News: மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட அமைப்பாளர் மணிமாறன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, ஜூலை 4, 2025: மயிலாடுதுறை அருகே செம்பனார் கோவிலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி காரைக்கால் மாவட்ட அமைப்பாளர் மணிமாறன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு காரைக்கால் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தேவமணி, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளி மணிமாறன் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்தவர் தேவமணி. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரவு தனது கட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பழிக்கு பழி – கொலை செய்யப்பட்ட மணிமாறன்:
இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த மணிமாறன் அறிவிக்கப்பட்டார். மணிமாறன் தற்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்ட அமைப்பாளராக இருந்து வருகிறார். இவர் இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி உட்கட்சி தேர்தல் நிர்வாகிகளுக்கான விருப்பமனு பெரும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்து காரைக்கால் திரும்பிய போது மயிலாடுதுறை அருகே செம்பனார் கோவில் பகுதியில் தனியார் பள்ளியின் எதிரே இவரது காரை வழிமறித்த மர்ம நபர்கள் நிறுத்தினர். பின்னர் காரை தாக்கி அதிலிருந்த மணிமாறனை சாலையில் இழுத்து சரமாரியாக வெட்டி தலையை சிதைதத்து படுகொலை செய்துள்ளனர்.
தகவல் அறிந்த செம்பனார் கோவில் போலீசார் மணிமாறன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், படுகொலை செய்த மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். பொதுமக்கள் நிறைந்த பகுதியில் நடைபெற்ற படுகொலை சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த 2021 ஆம் ஆண்டு காரைக்கால் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தேவமணி, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளி மணிமாறன் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.