நவ. 24 ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் புயல்.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய அப்டேட்..
Tamil Nadu Weather Alert: வடகிழக்கு பருவமழை தீவிரமடையக்கூடும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வரும் நாட்களில் நல்ல மழை பதிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், நவம்பர் 17, 2025 முதல் நவம்பர் 21, 2025 ஆம் தேதி வரை சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பதிவாகக்கூடும்.
வானிலை நிலவரம், நவம்பர் 16, 2025: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. அக்டோபர் மாதம் பருவமழை தொடங்கியதும், தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பதிவாகியிருந்தது. அதேபோல், அக்டோபர் மாதக் கடைசி வாரத்தில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு தொகுதி உருவாகி, அது படிப்படியாக வலுப்பெற்று “மோன்தா ” புயலாக உருவானது. இந்த புயல் ஆந்திரக் கடலோர பகுதிகளில் கரையை கடந்தது. இருப்பினும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பதிவானது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவுகிறது.
வங்கக்கடலில் உருவாகும் புயல் – பிரதீப் ஜான்:
நவம்பர் மாதம் தொடங்கியதும் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்து காணப்படுகிறது. இந்த சூழலில், வரக்கூடிய நாட்களில் வடகிழக்கு பருவமழை தனது முழு தீவிரத்தையும் காட்டும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: இனி தள்ளுவண்டி கடைகளுக்கும் உரிமம் கட்டாயம் – வெளியான முக்கிய அறிவிப்பு – எப்படி பெறுவது?
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இன்னும் இரண்டே நாட்களில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அதிகரித்து கனமழை பதிவாகக் கூடும். அதேபோல், இன்னும் ஒரே நாளில் டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை பதிவை காண முடியும். மேலும், வரக்கூடிய நவம்பர் 24, 2025 அன்று வங்கக் கடலில் ஒரு புயல் உருவாகக்கூடும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: இலங்கை தம்பதிக்கு பிறந்தவருக்கு இந்திய பாஸ்போர்ட்? நீதிமன்றம் முக்கிய உத்தரவு
தமிழகத்தில் தொடரும் கனமழை:
வடகிழக்கு பருவமழை தீவிரமடையக்கூடும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வரும் நாட்களில் நல்ல மழை பதிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், நவம்பர் 17, 2025 முதல் நவம்பர் 21, 2025 ஆம் தேதி வரை சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பதிவாகக்கூடும். இந்த சூழலில், நவம்பர் 16, 2025 தேதியான இன்று ஐந்து மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளையும் ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.