பாசி பிடித்த தண்ணீர் கேன் விற்றால் ரூ.5,000 அபராதம்: கடும் எச்சரிக்கை
Food Safety Department: பாசி பிடித்த அல்லது அசுத்தமான 20 லிட்டர் குடிநீர் கேன்களில் தண்ணீர் விற்பனை செய்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. குடிநீர் கேன்களில் நிறுவன பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் FSSAI உரிமம் எண் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும்.

20 லிட்டர் தண்ணீர் கேன்
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அதிகமாக கேன் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 20 லிட்டர் குடிநீர் கேன்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக குடிநீர் கேன்களில் சுத்தம், பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பான குடிநீரை பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசுத்தமான கேன்களில் தண்ணீர் விற்றால் அபராதம்
20 லிட்டர் குடிநீர் கேன்களில் பாசி பிடித்த நிலையில் அல்லது அசுத்தமாக இருந்தால் அந்த கேன்களில் தண்ணீர் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஒவ்வொரு கேனிலும் அந்த நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் FSSAI உரிமம் எண் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் இல்லாமல் விற்பனை செய்யப்படும் குடிநீர் கேன்கள் சட்டப்படி தவறானதாக கருதப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநகராட்சி மற்றும் துறை இணைந்து ஆய்வு
சென்னை மாநகராட்சி, உணவு பாதுகாப்புத் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியவை இணைந்து சிறப்பு குழுக்களை அமைத்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் குடிநீர் தயாரிப்பு ஆலைகள், விநியோக மையங்கள் மற்றும் கடைகளில் திடீர் சோதனைகள் நடத்தவுள்ளன. குறிப்பாக கேன் குடிநீரை நேரடியாக சூரிய ஒளியில் படும்படி வெளியே தேக்கி வைக்கக் கூடாது என்று நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு சூரிய வெப்பத்தில் வைக்கப்படும் குடிநீர் தரம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடிநீரில் தாதுக்கள் சரியான அளவில் இருக்க வேண்டும்
குடிநீரின் தரத்தை உறுதி செய்ய சில முக்கிய விதிமுறைகளையும் உணவு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. அதன்படி ஒரு குடிநீர் கேனை அதிகபட்சமாக 30 முறைக்கு மேல் மறுசுழற்சி செய்யக் கூடாது என விதி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குடிநீரில் கால்சியம் 10 முதல் 75 மில்லிகிராம்/லிட்டர் அளவிலும், மெக்னீசியம் 5 முதல் 30 மில்லிகிராம்/லிட்டர் அளவிலும் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தாதுக்கள் சரியான அளவில் இருந்தால்தான் குடிநீர் உடல்நலத்திற்கு பாதுகாப்பானதாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read:
அனுமதி இல்லாத ஆலைகளுக்கு சட்ட நடவடிக்கை
முறையான அனுமதி அல்லது தரச் சான்றிதழ் இல்லாமல் செயல்படும் குடிநீர் ஆலைகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் செயல்படும் குடிநீர் நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் அனைவரும் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழக முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மக்கள் உடல்நல பாதுகாப்பிற்கான நடவடிக்கை
கோடை காலத்தில் குடிநீர் தேவையும் பயன்பாடும் அதிகரிக்கும் நிலையில் தரமற்ற குடிநீர் மக்களின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அதனால் குடிநீர் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் தரநிலைகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டியது அவசியம் என அரசு வலியுறுத்தியுள்ளது. மக்கள் பாதுகாப்பான மற்றும் தரமான குடிநீரை பெறுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் குடிநீர் தரத்தை மேம்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.