தமிழகம் முழுவதும் நாளை கடைகள் இயங்காது – வணிகர் சங்கம் அறிவிப்பு
Karur TVK Stampede : கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் கலந்துகொண்டவர்களில் 40 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இதனையடுத்து அவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தமிழக வணிகர் சங்கம் சார்பில் செப்டம்பர் 29, 2025 அன்று கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) தலைவர் விஜய் செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் நடைபெற்ற பரப்புரையில் மக்கள் முன் பேசினார். விஜய்யைக் காணும் ஆர்வத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அன்றைய தினம் விடுமுறை தினம் என்பதால் அருகில் இருந்த ஊர்களில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இறந்தவர்களின் குடும்பத்தை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வணிகர் சங்கம் ஒரு நாள் கடையடைப்பை அறிவித்துள்ளது.
நாளை கடைகள் இயங்காது
சார்பாக கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் 40 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக தமிழக வணிகர் சங்கம் செப்டம்பர் 29, 2025 திங்கள் கிழமை தமிழகம் முழுவதும் கடையடைப்பை அறிவித்துள்ளது. இதனையடுத்து பெரும்பாலான கடைகள் இயங்காது என்று கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் சரஸ்வதி பூஜை, ஆயூத பூஜை கொண்டாடப்படவிருக்கும் நிலையில் வணிகர் சங்கம் அறிவித்துள்ள கடையடைப்பு மக்களை வெகுவாக பாதிக்கும் என கூறப்படுகிறது. காரணம் அன்றைய தினம் மக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்குவர் என்பதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவார்கள்.
இதையும் படிக்க : கரூர் கொடூரம்.. உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி.. தவெக தலைவர் விஜய் அறிவிப்பு




உயிரிழந்தவர்களுக்கு நன்கொடை அறிவிப்பு
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பரப்புரையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் கனிமொழி எம்பி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கி வருகிறார். முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிக்க : அடுத்த 30 நாளில் திருமணம்.. கரூரில் பறிபோன காதல் ஜோடி.. கதறும் குடும்பம்!
மற்றொரு பக்கம் பிரதமர் நரேந்திர மோடி தனது நிதியில் இருந்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 அறிவித்தார். இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரடியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்த பாஜக தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு கரூர் பாஜக சார்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு அறிவித்தார். அதே போல தமிழக காங்கிரஸ் சார்பில் அக்ட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை ரூ.1 கோடி இழப்பீடு அறிவித்திருந்தார்.