நகர்ந்த மேகங்கள்.. இடைவிடாமல் மழை பெய்யும்.. வானிலை அப்டேட் இதோ!

Chennai Weather Today: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நெருங்கியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

நகர்ந்த மேகங்கள்.. இடைவிடாமல் மழை பெய்யும்.. வானிலை அப்டேட் இதோ!

Heavy Rain

Updated On: 

22 Oct 2025 14:33 PM

 IST

தமிழ்நாடு, அக்டோபர் 22: வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தையொட்டி நகர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வட தமிழகம், புதுச்சேரி வழியாக கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், சென்னை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மாலை வரை இடைவிடாமல் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.

பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவு


குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புதுச்சேரிக்கு அருகில் நகர்ந்துள்ளது. இதனால் கடலூர் / புதுச்சேரி பகுதியிலிருந்து சென்னைக்கு மேகங்கள் நகர்ந்ததை ரேடாரில் காணலாம். இதன் காரணமாக டெல்டா மாவட்டத்தில் மழை குறையும். அதேசமயம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.  குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும்.

Also Read: சென்னை மக்களே உஷார்.. திறந்துவிடப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி – வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னையைப் பொறுத்தவரை வட சென்னை புறநகர்ப் பகுதிகளில்  பலத்த மழை பெய்யும், இது இன்னும் ஒரு மணி நேரத்தில் தொடங்கும். இது பின்னர் மீஞ்சூர், பொன்னேரி கும்மிடிப்பூண்டி பகுதிகளுக்கு மாறும் எனவும் பிரதீப் ஜான் கூறியுள்ளார். மேலும் டெல்டா பகுதியில் அதிகாலை முதல் மழை அளவு குறைந்து வருகிறது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, ஆரோவில் டவுன் குறைந்த அளவு மட்டுமே பெய்யும். இந்த மாவட்டங்களில் தெற்கிலிருந்து காற்று வீசுவதால் இனி கனமழைக்கு வாய்ப்பில்லை எனவும் அவர் கணித்துள்ளார்.

Also Read: தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை.. களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..

இந்நிலையில் ஏற்கனவே 2 காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் அக்டோபர் 25 ஆம் தேதி, அதாவது அடுத்த 4 நாட்களில் அடுத்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும், இது வடக்கு தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் எனவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அக்டோபர் 22ம் தேதியான இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.