இனி கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயங்காது – பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு – காரணம் என்ன?
Omni Bus : தமிழக ஆம்னி பேருந்துகள் கேரள போக்குவரத்துத்துறையால் சிறைபிடிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது சிறைபிடிக்கப்பட்ட பேருந்துகளுக்கு ரூ.70 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறி, இனி கேரளாவுக்கு தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, நவம்பர் 7 : தமிழகத்திலிருந்து கேரளா (Kerala) நோக்கி செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் அக்டோபர் 7, 2025 வெள்ளிக்கிழமை முதல் சேவையை நிறுத்துவதாக தமிழ்நாடு தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு காரணமாக, கடந்த சில நாட்களாக கேரள போக்குவரத்து துறையினர் தமிழகத்தைச் சேர்ந்த தனியார் பேருந்துகளை திடீரென நிறுத்தி, அபராதம் விதித்து வருவதாக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக பயணிகளை நடுவழியில் இறக்கிவிடுவதாகவும் ஆம்னி பேருந்து (Omni Bus) உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
என்ன நடந்தது?
முன்னறிவிப்பு ஏதும் இன்றி, கேரள போக்குவரத்து துறையினர் தமிழகத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகளை திடீரென சிறைபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அந்த பேருந்துகளின் மீது மொத்தம் ரூ.70 லட்சம் மதிப்பிலான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியளிக்க கூடிய விஷயம் என்னவென்றால், அந்த பேருந்துகளில் பயணித்த பயணிகளை நடுவழியிலேயே இறக்கிவிட்டதாகவும், இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க : தண்ணீர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து.. ஓட்டுநர் உட்பட 2 பேர் உயிரிழந்த சோகம்..
ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம்
இதையடுத்து, தமிழக தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நவம்பர் 7, 2025 அன்று அவசரக் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் கேரளாவின் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக நியாயமற்ற முறையில் கேரளா அரசு பேருந்துகளை சிறை பிடித்து அபராதம் விதித்து வருகிறது. இதனால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே நவம்பர் 7, 2025 முதல் கேரளாவுக்கு எந்த தனியார் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படாது,” என்று அறிவித்துள்ளது.
மேலும், இந்த பிரச்னையில் இரு மாநில அரசுகளும் உடனடியாக தலையிட்டு, விவகாரத்தை தீர்த்து வைக்க வேண்டும். பயணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, உடனடியாக நியாயமான தீர்வு எடுக்கப்பட வேண்டும் எனவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும் கேரளா அரசிடம் பேசி இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கூட்டத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையும் படிக்க : நாளை இந்த 6 மாவட்டங்களுக்கு கனமனழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இந்த திடீர் முடிவால், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து கேரளாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பல பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறது. அரசு பேருந்துகள் மற்றும் ரயில்களை நம்பி இருக்க வேண்டியிருக்கும். குறிப்பாக நவம்பர் 7, 2025 அன்று வெள்ளிக்கிழமை வார இறுதி நாள் என்பதால் மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தற்போது, தமிழ்நாடு தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சேவையை நிறுத்தியுள்ளதால், இரு மாநில அரசுகளும் உடனடியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.