தமிழகத்தில் வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டணம் உயர்வு.. வெளியான அறிவிப்பு
Tamil Nadu Power Tariff Hike : தமிழகத்தில் உள்ள பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். 3.16 சதவீதத்திற்கு மின் கட்டணம் உயர்வு இருக்கும் என அறிவித்துள்ளார்.அதே நேரத்தில், சிறுவணிகர்களுக்கும், அனைத்து வீட்டு இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் இல்லை எனவும் அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

சென்னை, ஜூன் 30 : தமிழகத்தில் உள்ள பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் (Tamil Nadu Power Tariff) உயர்த்தப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். 3.16 சதவீதத்திற்கு மின் கட்டணம் உயர்வு இருக்கும் என அறிவித்துள்ளார். அதே நேரத்தில், சிறுவணிகர்களுக்கும், அனைத்து வீட்டு இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் இல்லை எனவும் அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். 50 கிலோ வாட் வரை உள்ள தாழ்வழுத்த தொழிற்சாலைகள் 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறுவணிகர்களுக்கு மின்கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை எனவும் இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம்
அதோடு, விவசாயம், கைத்தறி, விசைத்தறி உள்ளிட்ட மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடரும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வீடு, தொழில் நிறுவனங்கள், விவசாய நிலங்களுக்கு மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை வசூலித்து வருகிறது.
இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணத்தை வசூலித்து வருகிறது. இதில், மானிய விலையிலும் மின்கட்டணம் வசூலித்து வருகிறது. மேலும், 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக 2024ஆம் ஆண்டு மின் கட்டணம் சற்று உயர்த்தப்பட்டது.




சமீப நாட்களாக தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், மின்கட்டணம் உயர்ததப்படாது என அமைச்சர் சிவசங்கர் மின்கட்டணம் எதுவும் உயர்த்தப்படாது என அறிவித்திருந்தார்.
வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டணம் உயர்வு
இந்த நிலையில், தமிழகத்தில் பெரிய வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். அதில், பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த 3.16 சதவீதத்திற்கும் மிகாமல் மின்கட்டணம் உயர்த்தப்படும். 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறுவணிகர்களுக்கும் மின்கட்டண உயர்வு இல்லை. விவசாயம், கைத்தறி, விசைத்தறி உள்ளிட்ட மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடரும் என தெரிவித்துள்ளார்.
எவ்வளவு?
தொழில், ஐடி நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.7.25ஆக இருந்த மின்சாரக் கட்டணம், தற்போது ரூ.7.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், ரயில்வே, மெட்ரோ நிலையங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.7.50 ஆக இருந்த மின்சார கட்டணம், ரூ.7.75ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டிட நிர்மாண பயன்பாடுக்கு யூனிட்டுக்கு ரூ.12.85 ஆக மின்சார கட்டணம், தற்போது ரூ.13.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.