Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil Nadu News Live Updates: வேகமெடுக்கும் மெட்ரோ பணிகள்.. சிறப்பாக துளையிட்ட மயில்!

Tamil Nadu Breaking news Today 23 July 2025, Live Updates: சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் மெட்ரோ பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் வரை சுரங்கம் தோண்டும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. மயில் என பெயரிடப்பட்ட இயந்திரம் இந்த பணியை மேற்கொண்டது

C Murugadoss
C Murugadoss | Updated On: 23 Jul 2025 16:36 PM
Share
Tamil Nadu News Live Updates: வேகமெடுக்கும் மெட்ரோ பணிகள்.. சிறப்பாக துளையிட்ட மயில்!
தமிழ்நாடு செய்திகள்

LIVE NEWS & UPDATES

  • 23 Jul 2025 05:05 PM (IST)

    டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ஆதரவாக வீடியோ.. காவலர் பணியிட மாற்றம்

    மயிலாடுதுறையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட கிண்டி காவல் நிலைய காவலர் செல்வத்தை ஆயுதப்படைக்கு மாற்றி சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. காவல் சீருடையில் ஆடியோ வெளியிட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

  • 23 Jul 2025 04:50 PM (IST)

    வாகன விதிமீறல் அபராதம்.. வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை

    சென்னையில் கடந்த 5 வருடமாக ரூ.450 கோடி போக்குவரத்து அபராதங்கள் வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 12 கால் சென்டர்கள் அமைத்து அபராதங்களை செலுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

  • 23 Jul 2025 04:30 PM (IST)

    கோடம்பாக்கம் முதல் பனகல் பார்க் வரை சுரங்க துளை அமைப்பு

    சென்னையில் பூவிருந்தவல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான மெட்ரோ பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் கோடம்பாக்கம் முதல் பனகல் பார்க் வரை சுரங்க மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான துளையிடும் பணிகள் மயில் என்ற இயந்திரம் மூலம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

  • 23 Jul 2025 04:10 PM (IST)

    லாக்அப் மரண வழக்கு.. காவலர்களுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

    தூத்துக்குடி மாவட்டத்தில் 1999ம் ஆண்டு நடந்த காவல் நிலைய விசாரணையில் கைதி மரணமடைந்தார். இதுதொடர்பான வழக்கில் டிஎஸ்பி உள்ளிட்ட 9 பேர் சிறையில் ஆயுள் தண்டனை பெற்று உள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.

  • 23 Jul 2025 03:53 PM (IST)

    அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதீத மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மழையால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் படிக்க

  • 23 Jul 2025 03:40 PM (IST)

    போதிய வசதி இல்லாததால் வராண்டாவில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்!

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முடியனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய வசதி இல்லாததால் வராண்டாவில் அமர்ந்து மாணவர்கள் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புதிய வகுப்பறை கட்டட பணிகளுக்கான விரைந்து தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

  • 23 Jul 2025 03:20 PM (IST)

    கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

    கனமழை காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவை குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றமடைந்துள்ளனர். கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

  • 23 Jul 2025 03:00 PM (IST)

    உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் ஊழல்..தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு

    உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் ஊழல் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த திட்டத்தில் சான்றிதழ் வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • 23 Jul 2025 02:45 PM (IST)

    டிஎஸ்பி சுந்தரேசன் மருத்துவமனையில் திடீர் அனுமதி

    மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றி சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட சுந்தரேசன் நெஞ்சு வலி காரணமாக சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் தன்னை பணி செய்ய விடாமல் உயர் அதிகாரிகள் தொல்லை கொடுப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

  • 23 Jul 2025 02:25 PM (IST)

    மருத்துவமனையில் இருந்தபடியே மக்களுடன் முதலமைச்சர் உரையாடல்

    உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப் பெற்று வரும் முதலமைச்சர் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் கலந்து கொண்டுள்ள மக்களுடன் வீடியோ கால் வாயிலாக உரையாடினார். அவர் மருத்துவமனையில் ஓய்வு நிலையில் இருந்தவாறு பணிகளை கவனித்து வருகிறார்.

  • 23 Jul 2025 02:07 PM (IST)

    முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்..

    தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். அப்போலோ மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவல் இன்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியிடப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

  • 23 Jul 2025 01:55 PM (IST)

    தொடர் மருத்துவ கண்காணிப்பில் முதல்வர் ஸ்டாலின்..

    ஜூலை 21, 2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். மேலும் அவருக்கு மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

  • 23 Jul 2025 01:35 PM (IST)

    அணைகளில் இருக்கும் 185 டி.எம்.சி..!

    தமிழகத்தில் அணைகளில் 82.91% நீர் இருப்பு உள்ளது. குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்குத் தட்டுப்பாடு இல்லை. வருங்கால மழை மூலமாக மேலும் நீர் வளம் பெருகும் என நம்பிக்கை நிலவுகிறது. 14,141 பாசன ஏரிகளில் 422 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும் மழை வருமானால் வறண்ட ஏரிகளும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க

  • 23 Jul 2025 01:07 PM (IST)

    திமுக ஆட்சியில் திருட்டுதனமாக மணல் அள்ளுவதாக இபிஎஸ் குற்றச்சாட்டு

    நிலத்தடி நீரை அதிகரிக்க அதிமுக ஆட்சி காலத்தில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்றப் பின் திருட்டு தனமாக பல்வேறு இடங்களிலும் மணல் அள்ளப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

  • 23 Jul 2025 12:45 PM (IST)

    ‘ஒவ்வொரு தீபாவளிக்கும் சேலை – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..

    2026 தேர்தலில் வெற்றி பெற்றால், ஒவ்வொரு தீபாவளிக்கும் தமிழக மக்களுக்கு அழகான சேலை வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். மணமகள்களுக்கு இலவச பட்டுச்சேலை வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டது.

  • 23 Jul 2025 12:35 PM (IST)

    குடும்ப தகராறு.. 3 பிள்ளைகளை விட்டு தாய் தந்தை தற்கொலை..

    சிவகங்கை மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக, 3 பிள்ளைகள் பள்ளிக்கு சென்றிருந்த நிலையில் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படிக்க.  

  • 23 Jul 2025 12:15 PM (IST)

    ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பதி..

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள நயினார்பேட்டை கிராமத்தில் ஆறுமுகம் (வயது 35), அவரது மனைவி ரேவதி (வயது 32) ஆகியோர் தங்களது வீட்டில் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த ஆறுமுகம், கடந்த சில மாதங்களாக மனைவியுடன் அடிக்கடி குடும்ப தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

  • 23 Jul 2025 11:50 AM (IST)

    திருவள்ளூர்: குற்றவாளியை நெருங்கும் போலீசார்.. விசாரணை வலை உ.பி இளைஞர்..

    திருவள்ளூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக டி.எஸ்.பி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. போலீசார் விசாரணையில், குற்றவாளியின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாலும், அவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிந்ததாலும், அந்த மாநில இளைஞரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க

  • 23 Jul 2025 11:30 AM (IST)

    திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை.. உ.பி இளைஞரிடம் விசாரணை..

    திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். சம்பவம் 2025 ஜூலை 12ம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் நடைபெற்றது. சிசிடிவி மற்றும் வீடியோ ஆதாரங்கள் மூலம் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

  • 23 Jul 2025 11:15 AM (IST)

    அந்தரங்கத் தரவுகளை நீக்க வழிகாட்டு நெறிமுறை.. உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்..

    இணையதளங்களில் பகிரப்படும் அந்தரங்கத் தரவுகளை அகற்றுவதற்காக ஒரு நிலையான வழிகாட்டு நெறிமுறை உருவாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாகும் பட்சத்தில், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் இணையதளங்களில் இருந்து அந்தரங்க தரவுகளை விரைந்து அகற்றும் நடவடிக்கைகள் சட்டரீதியாக எளிதாக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க.. 

  • 23 Jul 2025 10:55 AM (IST)

    பெண்களின் அந்தரங்க விடியோக்கள்.. உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்..

    சென்னை உயர் நீதிமன்றத்தில், பெண்களின் அந்தரங்க விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் பகிரப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் படி, பாதிக்கப்பட்டவர் ஒருவர், தனக்குத் தொடர்புடைய அந்தரங்க விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையதளங்களில் இருந்து அகற்றக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

  • 23 Jul 2025 10:40 AM (IST)

    அரசு மருத்துவமனை இணை இயக்குநர் மணிமேகலையின் புகார்.. கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்..

    கடலூர் அரசு மருத்துவமனை இணை இயக்குநர் மணிமேகலை, மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரிடம் புகார் அளித்ததையடுத்து, இதற்கான விசாரணை தீவிரமாக தொடங்கப்பட்டது. விசாரணையின் போது, புதுப்பாளையம் எஸ்.ஐ.டி. நர்சிங் இன்ஸ்டியூட்டில் இருந்து வந்த இந்த தம்பதியர், முறையான மருத்துவத் தகுதி இல்லாமல் கருக்கலைப்பு மருந்துகள் மற்றும் கருவிகளை வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் படிக்க.. 

  • 23 Jul 2025 10:20 AM (IST)

    கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி மருத்துவ தம்பதி..

    கடலூர் புதுப்பாளையத்தில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டதாக போலி மருத்துவர் தம்பதி கைது செய்யப்பட்டனர். சிவகுருநாதன், உமாமகேஸ்வரி ஆகியோர் எந்தவொரு மருத்துவ தகுதியும் இல்லாமல் கருக்கலைப்பு செய்து வந்தது கண்டறியப்பட்டது.

  • 23 Jul 2025 09:50 AM (IST)

    செந்தில் பாலாஜி மீதான வழக்கு என்ன?

    செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக சொல்லி பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்கும். அமலாக்கத்துறை அவரது வீட்டில் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களை சோதனை மேற்கொண்டு செந்தில் பாலாஜியை கைது செய்தனர். பின்னர் ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்தார்

    Read More

  • 23 Jul 2025 09:32 AM (IST)

    Senthil Balaji : சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கு தொடர்பான புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி வழக்கு விசாரணையை தள்ளிவைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • 23 Jul 2025 09:26 AM (IST)

    EMU ரயில்கள் மாற்றம் உண்டா? விவரம்

    2025 ஜூலை 24 அன்று கும்மிடிப்பூண்டி-கவரப்பேட்டை   இடையே பொறியியல் பணிகள் காரணமாக, சென்னை-கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10.15 மணி முதல் 3.45 மணி வரை பல EMU ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது

    Read More

  • 23 Jul 2025 09:21 AM (IST)

    மதுரை-கோவை எக்ஸ்பிரஸ் அப்டேட்

    போத்தனூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் புதுப்பிப்பு பணிகள் நடைபெறுவதால் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி,  மதுரை-கோவை எக்ஸ்பிரஸ் (16722) ரயில் 2025 ஜூலை 25 மற்றும் 27 தேதிகளில் மதுரையிலிருந்து புறப்பட்டு பொள்ளாச்சி வரை மட்டுமே இயக்கப்படும்; கோவைக்கு செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

  • 23 Jul 2025 08:57 AM (IST)

    தனி நபர் வளர்ச்சி விகிதம் இரு மடங்காக அதிகரிப்பு

    மேலும், ஒடிசா, கர்நாடகா, தமிழகம், தெலுங்கானாவில் தனி நபர் வளர்ச்சி விகிதம் இரு மடங்காக அதிகரித்த நிலையில், உத்தரகண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் குறைவானதாகவே உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

    Read More

  • 23 Jul 2025 08:40 AM (IST)

    Per Capita Income : தனிநபர் வருமானத்தில் தமிழகம் இரண்டாவது இடம்

    இந்தியாவில் தனிநபர் வருமானத்தில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் என்பது ஒரு ரூ. 196 399 ஆக உள்ளது. முதலிடத்தில் கர்நாடகா மாநிலம் உள்ளது. அங்கு,  தனி நபர் வருமானம் ரூ.2, 05,605 ஆக உள்ளது

  • 23 Jul 2025 08:22 AM (IST)

    சென்னையில் எந்தெந்த இடங்கள்?

    மாதவரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் மண்டலங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன. தியா திருமண மண்டபம், சமூக நலக்கூடம், பள்ளிகள், வாகன நிறுத்தம் போன்ற இடங்களில் முகாம்கள் நடைபெறும். பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் கோரிக்கைகளை நேரில் அளித்து உடனடி தீர்வு பெறலாம்.

    முழு விவரம் படிக்க

  • 23 Jul 2025 08:21 AM (IST)

    Ungaludan Stalin Camp Today : உங்களுடன் ஸ்டாலின் சென்னையில் இன்று!

    சென்னையில் இன்று 2025 ஜூலை 23, 6 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடக்கவுள்ளன. முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என்பதால், பொதுமக்கள் நேரில் கலந்து கொண்டு அரசு சேவைகளைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

  • 23 Jul 2025 08:09 AM (IST)

    குரூப் 4 தேர்வு விவரங்கள்

    குரூப் 4 தேர்வு , 2025 ஜூலை 12ஆம் தேதி நடைபெற்றது. 3,935 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழகம் முழுவதிலும் உள்ள சுமார் 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 பேர் எழுதினர். 

    Read More

  • 23 Jul 2025 08:05 AM (IST)

    குரூப் 4 தேர்வு குறித்த குற்றச்சாட்டு என்ன?

    குரூப் 4 தேர்வு தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் விடைத்தாள்கள் பாதுகாப்பாக கொண்டு வரப்படவில்லை என்றும் தேர்வறைக்கு உள்ளேயே விடைத்தாள்கள் பிரிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

  • 23 Jul 2025 07:44 AM (IST)

    TNPSC Group 4 Update : விடைத்தாள்கள் பாதுகாப்பாக வந்தன

    TNPSC Group 4 தேர்வுகள் முடிந்து அனைத்து விடைத்தாள்களும்  சீலிடப்பட்ட இரும்பு பெட்டிகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு கொண்டு வரப்படதாகவும், அட்டைப்பெட்டியில் வந்தது என்ற செய்தி உண்மை இல்லை என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 23 Jul 2025 07:23 AM (IST)

    தாக்கத்தை ஏற்படுத்துமா நடைபயணம்

    பாமக உட்கட்சி விவகாரம் தீராத நிலையில் உள்ளது.  ராமதாஸ் – அன்புமணி இடையே பனிப்போர் தொடர்ந்து வருகிறது. அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் தனித்தனியாக கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அன்புமணியின் இந்த நடைபயணம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பார்க்க வேண்டும்

    Read More

  • 23 Jul 2025 07:07 AM (IST)

    நவம்பர் 1ம் தேதி முடிவடையும் நடைபயணம்

    அன்புமணி ராமதாஸ் தொடங்கவுள்ள இந்த நடைபயணமானது தமிழ்நாடு தினமான நவம்பர் ஒன்றாம் தேதி முடிவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் நாள் சென்னையில் இருக்கக்கூடிய திருப்போரூரில் இருந்து இந்த நடைபயணம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

  • 23 Jul 2025 07:05 AM (IST)

    Anbumani : பத்து முக்கிய நோக்கங்களுடன் நடைபயணம் – அன்புமணி

    தமிழக மக்களின் நலனை மீட்டெடுக்கும் விதமாக பத்து முக்கிய நோக்கங்களுடன் 100 நாள் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். இந்த நடைபயணம் 2025 ஜூலை 25ஆம் தேதி கட்சி நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் அன்று தொடங்கப்படும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ( MK Stalin) உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் 3 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்த விவரங்களை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம். அரியலூர் மாவட்டத்தல் ஜூலை 23, 2025 அன்று மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஆடிமாதம் திருவாதிரை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 23, 2025 அன்று மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் தடை செய்யப்படவிருக்கிற பகுதிகளின் விவரங்களை இந்த பகுதியில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 23, 2025 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி அம்மாவாசையை முன்னிட்டு ஜூலை 23, 2025 அன்று முதல் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பேருந்து விவரங்கள் குறித்த தகவல்களை இந்தப் பகுதியில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளி் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மழை குறித்த தகவல்களை இந்தப் பகுதியில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் தமிழ்நாடு செய்திகளை தெரிந்துகொள்ள கிளிக் செய்க

Published On - Jul 23,2025 6:58 AM