தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு…தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைப்பு…சபாநாயகர் மு.அப்பாவு அறிவிப்பு!
Tamil Nadu Legislative Assembly Session : தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் கடந்த 20- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்தக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைப்பு
தமிழகத்தில் ஆண்டுக்கு இரு முறை, அதாவது 6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்பது விதியாகும். அதன்படி, 2026- ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 20- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. இந்த கூட்டமானது தமிழக அரசு தயாரித்து கொடுத்த கவர்னர் உரையுடன் தொடங்க வேண்டும். ஆனால், தமிழக அரசு தயாரித்த உரையில் பல்வேறு உண்மைக்கு புறம்பான தகவல்கள் இடம் பெற்றிருப்பதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகு தேசிய கீதம் இசைக்கப்படவில்லை எனவும் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். இதனால், ஆளுநர் உரையை சபாநாயகர் மு. அப்பாவு வாசித்தார். இதைத் தொடர்ந்து, முதல்வர் மு. க. ஸ்டாலின் தீர்மானங்களை முன்மொழிந்தார்.
சட்டமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
அதன்படி, ஒவ்வொரு நாளும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆளும் கட்சியான திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பேசினர். இதற்கு, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் எதிர் கருத்து தெரிவித்து சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது. அதன்படி, 5 நாட்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று சனிக்கிழமை ( ஜனவரி 24) தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார்.
மேலும் படிக்க: அதிமுகவில் இணைகிறார் தர்மர் எம்.பி…காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்!
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார். அப்போது, கவர்னர் உரைக்கு பதிலுரை அளிக்க வேண்டிய நான் கவர்னருக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்று தெரிவித்தார். மேலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள், அதில் செய்த சாதனைகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் பட்டியலிட்டார்.
முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
இதைத் தொடர்ந்து, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டார். முதல்வர் மு. க. ஸ்டாலினின் இந்த பதிலுரையை அதிமுகவினர் புறக்கணித்து சட்டப் பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்கவில்லை. சட்டமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கவர்னர் உரையை வாசிக்காமல் சென்றதால் பெரும் பரபரப்பு நிலவியது. இதற்கு, ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இதே போல, எதிர்க் கட்சியான அதிமுகவை சேர்ந்தவர்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.
மேலும் படிக்க: பகுதி நேர ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்…சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!