திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு? – அமைச்சர் தங்கம் தென்னரசு கொடுத்த ரிப்போர்ட்!
தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த 4.5 ஆண்டுகளில் திமுக அரசு செயல்படுத்திய 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 செயல்பாட்டிலும், 40 பரிசீலனையிலும் உள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நிதி உதவி குறைவாக இருந்தும் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை, செப்டம்பர் 2: கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு செய்த திட்டங்கள் அடங்கிய பட்டியலை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த நான்கரை ஆண்டுகளில் பல தொலைநோக்கு திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும், உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி இரட்டை இலக்கம் என்ற அளவில் வளர்ந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். மேலும் வருவாய், நிதி பற்றாக்குறை ஆகியவை குறைக்கப்பட்டுள்ளது என கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசின் நிதி பங்களிப்பு முறையாக இல்லாத நிலையில் கூட அதனை சிறப்பாக எதிர் கொண்டு தமிழ்நாடு அரசு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என கூறினார்.
505 தேர்தல் வாக்குறுதிகள்
மேலும் மேலும் திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகள் செயல்பாட்டில் இருப்பதாகவும், 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மத்திய அரசிடம் 37 திட்டங்கள் குறித்த அனுமதி நிலுவையில் இருப்பதாகவும், 64 திட்டங்கள் தற்போது நடவடிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படாதவையாக இருப்பதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Also Read: அதிமுக – பாஜக கூட்டணி..! தன்னால் எந்த ஒரு கருத்தை கூற முடியாது.. அண்ணாமலை பளீச் பதில்!
திமுக அரசு செய்த தொலைநோக்கு திட்டங்கள்
பல்வேறு தேர்வாணையங்கள் மூலம் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளது. மூன்று லட்சம் பேருக்கு நான் முதல்வன் உள்ளிட்ட வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் பணியாணை வழங்கப்பட்டுள்ளது. காலை உணவு திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களின் வருகை 9 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் மாணவர்கள் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வருவதே 98 சதவீதம் அதிகரித்துள்ளது.
வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6,000 கோடி செலவில் 235 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் விடியல் பயணத்தில் தினமும் சராசரியாக 65 லட்சம் பெண்கள் பயணம் மேற்கொள்கின்றனர். 2,200 க்கும் மேற்பட்ட பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 3,700 பேருந்துகள் புதிதாக வாங்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் 45 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோயில் நிலங்கள் 7,400 ஏக்கர் மீட்கப்பட்டுள்ள நிலையில் ரூ.7658 கோடி மதிப்பிலான சொத்துக்களும் மீட்கப்பட்டுள்ளன.4,500 விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 76 சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Also Read: வாக்குறுதிகளில் 13% தான் திமுக நிறைவேற்றியது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
எடப்பாடி பழனிசாமிக்கு பதில்
இதற்கிடையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, “தமிழ்நாட்டின் கடன் பற்றி பேசுபவர்கள் ஏன் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி பற்றி பேசுவதில்லை என கேள்வி எழுப்பிய அவர் நிதி ஆணையம் வகுத்துள்ள எல்லைக்கு உள்ளே தான் கடன் உள்ளது வாங்கும் கடனை எப்படி செலவு செய்கிறோம் அது பொருளாதார மேம்பாடாக எப்படி மாறி இருக்கிறது என்பதையும் விமர்சனம் செய்பவர்கள் பார்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.