புத்தாண்டு கொண்டாட்டம் – பட்டாசுகள் வெடிக்க தடை… என்னென்ன கட்டுப்பாடுகள்?
New Year Safety Measures: 2026 ஆம் ஆண்டு துவங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் புத்தாண்டை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாடத்தின் ஒரு பகுதியாக பட்டாசுகள் வெடிக்கக் கூடாது உட்பட காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, டிசம்பர் 30: புத்தாண்டு (New Year) கொண்டாட்டம் தொடர்பாக, சென்னையில் பட்டாசுகள் வெடிப்பதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு துவங்க இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் பொதுமக்கள் பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்
சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணிக்காக ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் மாநகர காவல்துறை உட்பட மொத்தம் 19,000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், காவல்துறைக்கு உதவியாக 1,500க்கும் மேற்பட்ட ஹோம் கார்டுகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதையும் படிக்க : திமுகவின் தேர்தல் அறிக்கை…. மக்களும் நேரடியாக கருத்து தெரிவிக்கலாம்… திமுகவின் புதிய செயலி
டிசம்பர் 31, 2025 அன்று 9 மணி முதல், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. சென்னை, மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புனித தோமையார் மலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இருசக்கர வாகனங்களில் நடைபெறும் பைக் ரேசிங் மற்றும் சட்டவிரோத செயல்களை தடுக்க, கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் 30 கண்காணிப்பு மற்றும் தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள 100க்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், பிற வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டு இரவு முதல் ஜனவரி 1, 2026 வரை, கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்கவும், நீராடவும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல்துறை, ஏடிவி வாகனங்கள் பயன்படுத்தப்படும் என எச்சரித்துள்ளது.
மது அருந்தும் இடங்களில் குழந்தைகளுக்கு அனுமதியில்லை
மது அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களில் குழந்தைகள் அனுமதிக்கப்படக்கூடாது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவசர மருத்துவ தேவைகளுக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் முக்கிய இடங்களில் தயார் நிலையில் வைக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடியிருப்பு வளாகங்கள் மற்றும் அபார்ட்மெண்ட்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் மற்றும் ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்துறை அனுமதி பெற வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ஆங்கில புத்தாண்டுக்கு பொதுமக்கள் ஈஸியா ஊருக்கு செல்லலாம்…TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், பாஸ்போர்ட், வேலைவாய்ப்பு உள்ளிட்ட ஆவண சரிபார்ப்புகளில் பாதிப்பு ஏற்படும் என்பதால், இளைஞர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகரின் 12 காவல் மாவட்டங்களிலும், பொதுமக்கள் எந்த இடையூறும் இன்றி, பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் புத்தாண்டை கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் காவல்துறை வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி, அமைதியாகவும் பொறுப்புடனும் புத்தாண்டை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.