காவல் விசாரணையில் இளைஞர் உயிரிழப்பு: போலீசார் மீது கொலை வழக்கு பதியுங்கள்! – சீமான் வலியுறுத்தல்

Police Custody Death: திருப்புவனத்தில் காவல்துறையினர் விசாரணையின் போது தம்பி அஜித் உயிரிழந்ததை சீமான் கடுமையாக கண்டித்து, சம்பந்தப்பட்ட ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரது குடும்பத்துக்கு வேலை மற்றும் நிதியுதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

காவல் விசாரணையில் இளைஞர் உயிரிழப்பு: போலீசார் மீது கொலை வழக்கு பதியுங்கள்!  - சீமான் வலியுறுத்தல்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

Published: 

30 Jun 2025 08:45 AM

சென்னை ஜூன் 30: சிவகங்கை மாவட்டம் (Sivagangai) திருப்புவனத்தில் உள்ள கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் (Guard Worker Ajith), திருட்டு புகாரில் போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது உயிரிழந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் (Naam Katchi Leader Seeman) தெரிவித்துள்ளார். மேலும் விசாரணையின் போது கடுமையாக தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து சீமான் கண்டனம் தெரிவித்ததுடன், ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறினார். வெறும் பணிநீக்கம் மட்டும் தண்டனையாக போதாது என அவர் விமர்சித்துள்ளார். சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். அதேசமயம், அஜித்தின் குடும்பத்துக்கு அரசு வேலை மற்றும் நிதியுதவியும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

நகை திருடியதாக காவலாளி கைது: உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக தற்காலிகமாக பணியாற்றி வந்த தம்பி அஜித் என்ற இளைஞர், தங்க நகை திருடியதாக ஏற்பட்ட புகாரின் அடிப்படையில் திருப்புவனம் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக தகவல். இந்த விசாரணையின் போது அவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாலேயே அஜித் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

காவலர்கள் பணியிடை நீக்கம் செய்தது போதுமா? – சீமான்

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு, திருப்புவனம் காவல்நிலையத்தில் பணியாற்றிய ஆறு தனிப்படை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கடும் கண்டனத்துடன் விமர்சித்துள்ளார். விசாரணையின் பெயரில் தாக்கி படுகொலை செய்த காவலர்களுக்கு வெறும் பணிநீக்கம் மட்டுமா தண்டனையென்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான் கடும் கண்டனம் வெளியீடு

சமூக நீதியைக் கூறும் திராவிட மாடலுக்கே கேள்விக்குறி?

தம்பி அஜித் மரணத்திற்கு காரணமான காவலர்களிடம் எந்தவிதமான கொலை வழக்கும் பதிவு செய்யப்படாததையும், அவர்களை கைது செய்து உரிய விசாரணை நடத்தாததையும் சீமான் கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாட்டில் சாதாரண மக்களுக்கு ஒரு விதமான நீதி, அதிகாரம் உள்ளவர்களுக்கு வேறொரு விதமான நீதி என்பதை இது வெளிப்படுத்துவதாகவும், இது சமூக நீதியைக் கூறும் திராவிட மாடலுக்கே கேள்விக்குறியாக இருப்பதாகவும் கூறினார்.

திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட காவல் விசாரணை மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதுவரை யாருக்கும் உரிய நீதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். இது ஒரு கொடுங்கோன்மை என சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

காவலர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் – சீமான்

இதையடுத்து, தம்பி அஜித் மரணத்திற்கு காரணமான காவலர்களிடம் உடனடியாக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், குற்றப்புலனாய்வு துறையின் மூலம் எந்தவித அதிகாரத் தாக்கமும் இல்லாத நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், அஜித் குடும்பத்தினருக்கு உரிய நிதியுதவி மற்றும் ஒரு நபருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டுமெனவும் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.