“அவசரப்பட்டு முடிவெடுப்பதா?”.. செங்கோட்டையனை விமர்சித்த சசிகலா!!
sasikala speaks about sengottaiyan: தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்கிறீர்கள். இந்த ஒற்றுமை இருந்தாலே போதும், நிச்சயம் அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டுவருவோம் என்று ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதோடு, செங்கோட்டையன் அவசரப்பட்டு கோபத்தில் பெரிய முடிவெடுத்துவிட்டதாகவும், மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
சென்னை, டிசம்பர் 05: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9வது நினைவு நாளான இன்று (டிசம்பர் 5) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின் அவரை வணங்கிய சசிகலா, ஜெயலலிதாவின் படத்தின் முன் கைகூப்பி, அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவோம்” என்று உறுதிமொழி ஏற்றார். தொடர்ந்து, நினைவிடத்திலிருந்து வெளியே வந்த சசிகலா, “தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்கிறீர்கள். இந்த ஒற்றுமை இருந்தாலே போதும், நிச்சயம் அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டுவருவோம். அதை நிச்சயம் செய்து காட்டுவோம்” என்று உறுதியுடன் தெரிவித்தார். அதிமுகவை மீட்டெடுப்பதே தனது ஒரே இலக்கு என்றும், ஜெயலலிதாவின் கொள்கைகளை மீண்டும் நிலைநாட்டுவோம் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க: விஜய்யின் பொதுக்கூட்டம் எப்போ தெரியுமா? அனுமதி கேட்டு தவெக சார்பில் விண்ணப்பம்
தேவர் ஜெயந்தியில் சசிகலாவை சந்தித்த செங்கோட்டையன்:
முன்னதாக, தேவர் ஜெயந்தியன்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை சந்தித்த செங்கோட்டையன், அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என வெளிப்படையாக குரல் எழுப்பினார். அப்போது, அவர் சசிகலாவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தனது நீக்கத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்ல உள்ளதாக கூறி வந்தார். ஆனால், அப்படி எடுக்கும் முடிவெதுவும் தனக்கு பலன் தராது என்பதை அறிந்த அவர், யாரும் எதிர்பாராத வண்ணம் தவெகவில் இணைந்தார். இது தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்பட்டது. ஏனெனில், விஜய்யின் தவெகவில் ஒரு பெரும் அரசியல் தலைவர் இணைவது அதுவே முதலாவதாக இருந்தது.
என்ன சொல்வது என்றே தெரியவில்லை:
இந்நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த சசிகலாவிடம், செங்கோட்டையன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஒருத்தர் மேல் இருக்கிற கோபத்தில் அவசரப்பட்டு பெரிய முடிவுகளை எடுக்கக் கூடாது. மக்களுக்காகவே வாழ்ந்த எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கிய இயக்கத்தில் இருந்து இப்படி முடிவெடுப்பதை என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்று ஆதங்கத்துடன் பேசினார். செங்கோட்டையனின் முடிவு தவறு என்று நேரடியாகச் சொல்லாமல், மறைமுகமாக விமர்சித்தார்.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் விவகாரம்… அரசின் மனுவில் மறைமுக நோக்கம்…. நிராகரித்த நீதிமன்றம்
திமுக அரசு அரசியல் செய்கிறது:
மேலும் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசிய அவர், கோயில் கார்த்திகை தீப விவகாரத்தில் திமுக அரசு அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டினார். 2014ல் உச்ச நீதிமன்றமே தெளிவான தீர்ப்பு கொடுத்துவிட்டது. அதை மதிக்காமல் திமுக அரசு தேவையில்லாத அரசியல் செய்கிறது என்று கடுமையாக விமர்சித்தார்.