பொங்கல் பொருள்கள் விற்பனை அமோகம்…கரும்பு ரூ.700-மல்லி கிலோ ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை!

Pongal Festival Items Sales: தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கான பொருள்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில், ஒரு கட்டு கரும்பு ரூ.700 வரையும், ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.8 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் பொருள்களை வாங்கி செல்கின்றனர்.

பொங்கல் பொருள்கள் விற்பனை அமோகம்...கரும்பு ரூ.700-மல்லி கிலோ ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை!

பொங்கல் பண்டிகை பொருள்கள் விற்பனை அமோகம்

Updated On: 

14 Jan 2026 12:17 PM

 IST

தமிழகத்தில் நாளை வியாழக்கிழமை ( ஜனவரி 15) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் சிறப்பு சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பொங்கல் இடுவதற்கான பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் முக்கிய இடமான கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு சந்தையில் பொங்கல் பொருள்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இங்கு, மதுரை, சேலம், தேனி, பண்ருட்டி, வடலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நேரடியாக கரும்புகள், மஞ்சல் குலைகள், இஞ்சி உள்ளிட்ட பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இது தவிர மேலும் ஏராளமான பொருட்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளன. இங்கு, கரும்பு கட்டுகள் ரூ. 300 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது கரும்புகளின் உயரத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. மேலும், மஞ்சள் குலை ரூ.60 முதல் ரூ.70 வரைக்கும், இஞ்சி கொத்து ரூ.100 முதல் ரூ. 120 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

கரும்பு விலை ரூ.550 இல் இருந்து ரூ.700 ஆக உயர்வு

இங்கு, சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கரும்புகளை கொள்முதல் செய்து செல்கின்றனர். இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கரும்பு வியாபாரி முத்து கூறுகையில், பொங்கல் வியாபாரம் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு கட்டு கரும்பு ரூ.550-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாங்கள் தற்போது கடந்த 3 நாட்களாக இங்கு தங்கியிருந்து வியாபாரம் செய்து வருகிறோம். பொதுமக்கள் ஆர்வமுடன் கரும்புகளை வாங்கி செல்கின்றனர் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே! மக்கள் மத்தியில் மறைந்து-மறந்து போன பொங்கல் வாழ்த்து அட்டைகள்!

விற்பனைக்காக 350 டன் காய்கறிகள்- 30 டன் மலர்கள்

இதே போல, கடலூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் ஏராளமான பொங்கல் பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. இதில், சுமார் 350 டன் காய்கறிகளும், மலர் சந்தையில் சுமார் 30 டன் மலர்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. கடலூரில் வாழை தார் உற்பத்தி குறைந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வாலை தார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.  இங்கு, மல்லி கிலோ ரூ.1400 முதல் ரூ.1500 வரையும், நாட்டு ரோஜா கிலோ ரூ.100, பெங்களூரு ரோஜா கிலோ ரூ.200 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ மல்லி ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை

இதை தவிர்த்து சாமந்தி பூ கிலோ ரூ.60 முதல் ரூ.120 வரையும், ஆவாரம் பூ கசம் ஒன்று ரூ.60 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல, திண்டுக்கல் அண்ணா பூ சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ தரத்தை பொறுத்து ரூ.6000 முதல் ரூ.8000 வரையும், முல்லை பூ ரூ.2000 முதல் ரூ 2,500 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை மற்றும் பனி பொழிவு காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போல, பல்வேறு மாவட்டங்களில் பொங்கல் பொருள்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க: இந்த பொங்கல் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியை கொண்டு வரட்டும் – பிரதமர் மோடி வாழ்த்து..

திருடப்பட்ட செல்போனை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்த இளம்பெண்
ஜூன் மாதம் முதல் ரீச்சார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு?.. எந்தெந்த நெட்வொர்க் இதில் அடங்கும்?
உலகின் முதல் குளோன் ஹைபிரிட் அரிசி வகையை உருவாக்கிய சீனா
மக்களின் துயரத்தை துடைக்கும் போன் பூத்