பணிக்கு வராமல் போராட்டம்.. ஆசிரியர்களுக்கு சம்பளம் ‘கட்’.. அரசு அதிரடி உத்தரவு!!
No Work - No Pay for Teachers: விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த நிலையில், பணி செய்யாமல் போராட்டத்தில் இருக்கும் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் சம்பளம் கிடையாது (No Work – No Pay) என்ற நடைமுறை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள்
சென்னை, ஜனவரி 08: பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த டிசம்பர் 26 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரை ஆண்டு விடுமுறைக்குப் பிறகு ஜனவரி 5 முதல் பள்ளிகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள நிலையிலும், ஆசிரியர்கள் போராட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து வருகின்றனர். அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை கூட சமரச முடிவிற்கு வராததால், நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. இந்த நீடித்த போராட்டத்துக்கு முடிவு கட்டும் வகையில், தொடக்ககல்வித் துறையால் திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுப்பற்றி இக்கட்டுரையில் முழுமையாக காணலாம்.
இதையும் படிக்க : ஜன.28- இல் தமிழகம் வரும் பிரதமர் மோடி?…தாமரை மகளிர் மாநாட்டில் பங்கேற்கிறார்!
அதிரடியாக பறந்த உத்தரவு:
இதுகுறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் அனுப்பிய உத்தரவில், அரையாண்டு விடுமுறைக்கு பிறகு,
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் நலத் திட்டப் பொருட்கள் வழங்கப்பட்டுவிட்டன. ஆனால், வகுப்புகளை நடத்த வேண்டிய ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடுவதால் மாணவர்களின் கல்வி சீராக நடைபெறவில்லை. இதன் காரணமாக கற்பித்தல் செயல்பாடு தாமதமாகிறது. அதோடு, பள்ளி ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
சம்பளம் கிடையாது:
அதனால், பணி செய்யாமல் போராட்டத்தில் இருக்கும் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் சம்பளம் கிடையாது (No Work – No Pay) என்ற நடைமுறை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் அந்த நாட்களில், ஊதியம் கணக்கில் சேர்க்கப்படாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஊதியமில்லா விடுப்பாக கணக்கு:
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராடத்தில் ஈடுபட்டு பணிக்கு வராமல் உள்ள ஆசிரியர்களுக்கு, மருத்துவ காரணங்களால் சான்றிதழுடன் வராத ஆசிரியர்களைத் தவிர வேறு எந்த வித விடுப்பும் அனுமதிக்கப்படக்கூடாது. அதோடு, பள்ளிக்கு வராத நாட்கள், ஊதியமில்லா விடுப்பு என வருகைப் பதிவில் குறிக்கப்படவேண்டும் என்றும் பள்ளிகளின் வட்டார மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் இந்த நடவடிக்கைகள் உறுதியாக மேற்கொள்ளப்படுவதை கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : எஸ்.ஐ.ஆர். பணியில் திமுக இரட்டை வேடம்…எதிர்க் கட்சிகள் பரபரப்பு குற்றச்சாட்டு!
சென்னையில் இன்றும் தொடரும் போராட்டம்:
இதனிடையே, சென்னையில் இன்றும் 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வரை ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகளை எங்களால் முன்கூட்டியே கணித்து வைத்திருந்தோம். அதன் காரணமாகவே ஆசிரியர்கள் பலமாக போராட்டத்தில் நிலைபெறுகிறார்கள். அரசு பிடிவாதமாக இருக்கும் போது அதை மாற்றி காட்டஇப்போது களத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதனால் எங்கள் சக ஆசிரியர்கள் முடிவு வரும் வரை பின்வாங்காமல் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.