“யார் உண்மையான ரூட் தல?” ரயில் நிலையத்தில் சரமாரியாக மோதிய கல்லூரி மாணவர்கள்.. சென்னையில் பரபரப்பு!!
பச்சையப்பன் கல்லூரி மற்றும் நந்தனம் கல்லூரி மாணவர்களுக்கிடையே “யார் உண்மையான ரூட் தல?” என்ற போட்டி மனப்பான்மை காரணமாக தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து நந்தனம் கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்களை கைது செய்தனர்.
சென்னை, டிசம்பர் 14: சென்னையில் மின்சார ரயில்கள் மற்றும் மாநகரப் பேருந்துகளில் காலம் காலமாக ஓயாமல் ‘ரூட்டு தல’ பிரச்சனை தொடர்ந்து வருகிறது. யார் ரூட்டு தல என்ற மோதலில், கெத்து காட்டுகிறேன் என நினைத்து கல்லூரி செல்லும் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையையே தொலைத்து விடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அடுத்தடுத்து பள்ளி முடித்து கல்லூரி வரும் சென்னையை சேர்ந்த மாணவர்கள், படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை விட, ரூட்டு தல பட்டத்தை பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கிலேயே கல்லூரி வருகின்றனர். கல்லூரி நிர்வாகமும், காவல்துறையும், அரசும் எவ்வளவோ அறிவுறுத்தியும் மாணவர்கள் திருந்த மறுக்கின்றனர். அந்தவகையில், தற்போது சென்னையில் நடந்த பிரச்சனை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்க: மதுபோதையில் யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை.. பெண் பரிதாப பலி.. உபியில் அதிர்ச்சி சம்பவம்!
“யார் உண்மையான ரூட் தல?” என்பதில் மோதல்:
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களில் பயணிக்கும் சில கல்லூரி மாணவர்கள் இணைந்து, ‘பல்லாவரம் ரூட் தல’ என்ற பெயரில் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த கணக்கை பின்தொடரும் பச்சையப்பன் கல்லூரி மற்றும் நந்தனம் கல்லூரி மாணவர்களுக்கிடையே “யார் உண்மையான ரூட் தல?” என்ற போட்டி மனப்பான்மை காரணமாக தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பும் கடும் மோதல்:
இந்த நிலையில், கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் பயணம் செய்த பச்சையப்பன் மற்றும் நந்தனம் கல்லூரி மாணவர்களுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ரயில் குரோம்பேட்டை நிலையம் வந்ததும், இரு தரப்பினரும் கீழே இறங்கி வாய்த்தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மோதலாக வெடிக்கவே, இருதரப்பும் மாறி மாறி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
ஒருவர் காயம், 5 மாணவர்கள் கைது:
இதில், பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும் ஆகாஷ் (18) என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில், தற்போது அவர் தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக, தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து நந்தனம் கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்களை கைது செய்தனர்.
வழக்கமாகும் ‘ரூட் தல’ மோதல்:
இதேபோல், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, அனுப்பம்பட்டு, பொன்னேரி ஆகிய இடங்களில் இருந்து வரும் பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்களிடையே, மின்சார ரயிலில் பயணிக்கும் போது ‘ரூட் தல’ தொடர்பாக மோதல்கள் ஏற்படுவது வழக்கமாகி வருகிறது.
மேலும் படிக்க: இந்த மாநிலத்தில் 7,400 பேருக்கு ஹெச்ஐவி தொற்றா? 400 குழந்தைகளா?
முன்னதாக, அனுப்பம்பட்டு ரயில் நிலையத்தில் நடந்த ஒரு மோதல் சம்பவத்தில், பச்சையப்பன் கல்லூரி மாணவர் சச்சின் என்பவரை கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்திருந்தனர். அவர் தினமும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருவதாக கூறப்படுகிறது.
ரயில் பயணிகள் அதிர்ச்சி:
இதன்தொடர்ச்சியாக, நேற்று முன்தினம், தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில், கும்மிடிப்பூண்டியில் இருந்து வந்த மின்சார ரயிலில் மாநில கல்லூரி மாணவர்கள் பயணம் செய்ததை கண்ட சச்சின், தன்னை கைது செய்ததற்குக் காரணம் இவர்கள்தான் என கூறி, மாநில கல்லூரி மாணவர்கள் 3 பேரை தாக்கினார். இதற்கு பதிலாக, அந்த மாணவர்களும் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினரும் மாறிமாறி தாக்கியதால், ரயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.