பாலியல் துன்புறுத்தல், குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ரிதன்யாவின் தந்தை டிஜிபி அலுவலகத்தில் புகார்!
Rithanya's Father Filed Complaint in DGP Office | திருப்பூரில் வரதட்சணை கொடுமை காரணமாக ரிதன்யா என்ற இளம் பெண் திருமணமான 5 மாதங்களில் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், இந்த வழக்கை பாலியல் துன்புறுத்தல் மற்றும் குண்டாஸ் சட்டத்தில் விசாரிக்க வேண்டும் என்று அந்த பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.

திருப்பூர், ஆகஸ்ட் 01 : திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கை பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவை மாற்றி பதிவிட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவரது தந்தை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ரிதன்யா தற்கொலை விவகாரத்தில் வரதட்சணை கொடுமை இல்லை என நேற்று (ஜூலை 31, 2025) நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம் அளித்திருந்த நிலையில், தற்போது ரிதன்யாவின் தந்தை காவல் நிலையத்தில் இவ்வாறு புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், இந்த புகார் குறித்து ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவை உலுக்கிய ரிதன்யா வரதட்சனை கொடுமை வழக்கு
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணம் ஆகி ஐந்து மாதங்களில் ரிதன்யா வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ரிதன்யா தனக்கு நடைபெற்ற கொடுமைகள் குறித்து தனது தந்தைக்கு அனுப்பிய ஆடியோக்கள் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தின் வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதற்கிடையே ரிதன்யா மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அதனை சந்தேக மரணம் என மட்டுமே குறிப்பிட்டுள்ள நிலையில், பாலியல் துன்புறுத்தல் மற்றும் குண்டர் சட்டம் பதியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ரிதன்யாவின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க : Tirunelveli Honour Killing: கவின் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! நாங்க உண்மையா காதலிச்சோம்.. சுபாஷினி வெளியிட்ட வீடியோ..
புகார் குறித்து விளக்கம் அளித்த ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை
இது குறித்து கூறியுள்ள ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, எனது மகளின் தற்கொலைக்கு காரணமாக உள்ள அவர் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகள் இறப்பதற்கு முன்பாக பதிவு செய்த ஆடியோவில் பாலியல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளதால் சந்தேக மரண வழக்கை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவை தாமதமாக வருவதாகவும் இதனால் உடனடியாக சுந்தரமாக விசாரிக்கும் அதிகாரியை மாற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்ததாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க : சிறை டூ அபராதம்.. பெண்களை மிரட்டினால் அவ்வளவு தான்… காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு!
தொடர்ந்து பேசிய அவர், தனது மகள் இல்லாமல் இருந்தும் இறந்தது போல வாழ்ந்து வருவதாகவும் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மூன்று நாட்களில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்ததால் விசாரணை மந்தமாக நடைபெறுவதாக தனக்கு தோன்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதேபோல மற்ற பெண்களுக்கு நேரிடக்கூடாது எனவும் உடனடியாக தக்க தண்டனை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிஜிபி அலுவலகம், உள்துறை தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களில் புகார் அளித்துள்ளதாகும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.