தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்த முடியாது…அமைச்சர் சேகர்பாபு!
Tamil Nadu Religious Riots: திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம் மூலம் தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்த முடியாது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு தெரிவித்தார். இதனை முதல்வர் மு. க. ஸ்டாலின் முறியடிப்பார் என்றும் குறிப்பிட்டார்.

மதக்கலவரத்தை ஏற்படுத்த முடியாது
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் திட்டங்களில் ஒன்றான ராமேஸ்வரம் காசி பயணம் திட்டத்தின் கீழ், 60 வயது முதல் 70 வயது குள்ளான மூத்த குடிமக்கள் 602 பேர் இன்று சனிக்கிழமை (டிசம்பர் 6) ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வழியாக காசி சென்றடைகின்றனர். இதில் ஒவ்வொருவருக்கும் இலவசமாக 18 அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு நபருக்கு ரூ. 27 ஆயிரத்து 500 ரூபாய் என இந்த பயணத் திட்டத்திற்கு, ரூ. 3.80 கோடி தமிழக அரசு வழங்கியுள்ளது.
மதக்கலவரத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது
சமாதானம் என்பது தான் இறை கொள்கையை தவிர சனாதனம் இறைக் கொள்கை கிடையாது. வட மாநிலங்களில் மத கலவரங்களை ஏற்படுத்தி அரசியல் மாற்றத்தை உருவாக்கியது போல தமிழகத்திலும் உருவாக்கலாம் என்று எண்ணுகின்றனர். முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பிரிவினை என்றும் எடுபடாது. பிரிவினை சக்திகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்.
மேலும் படிக்க: பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசு.. திருப்பரங்குன்ற விவகாரம் குறித்து அண்ணாமலை சாடல்..
கோவில் வழக்கத்தை மாற்றுவதை எப்படி ஏற்க முடியும்
ஒவ்வொரு மதத்தினருக்கும் தேவையான பாதுகாப்பை ஏற்படுத்தி தருவது தான் திமுக அரசின் லட்சியமாகும். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் இரு மதங்களிடையே மதக் கலவரத்தை உருவாக்க நினைத்த நிலையில், அதனை மு.க ஸ்டாலின் சக்கர வியூகம் அமைத்து முறியடித்துள்ளார். திருவண்ணாமலையில் மலை மீதும், கோவிலிலும் இரு தீபங்கள் ஏற்றப்படுவது வழக்கமாகும். அதை மாற்றி 5 இடங்களில் தீபம் ஏற்றுவேன் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும். இதே போல தான் திருப்பரங்குன்றம் விவகாரத்திலும்.
அதிமுகவின் லட்சியங்கள்-கொள்கைகள் காற்றில் பறக்கிறது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவின் நிலைப்பாடுகள் அனைத்தும் சுய சிந்தனையுடன் எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது இருக்கும் அதிமுக டெல்லியில் இருக்கும் அமித்ஷா என்ன கூறுகிறாரோ அதன்படியே முடிவுகள் எடுக்கப்படுகிறது. இதனால் அதிமுகவின் லட்சியங்கள், கொள்கைகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் திருப்பரங்குன்றத்தில் இரண்டாவது இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு எதற்கு தெரிவித்த நிலையில், தற்போது அதனை மறந்து விட்டு செயல்படுகின்றனர்.
மேலும் படிக்க: “தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும் திமுக அரசு”.. எடப்பாடி பழனிசாமி தாக்கு!!
2026 தேர்தலை மையமாக வைத்து …
தமிழகத்தில் மத மோதல்கள் ஏற்படாதவாறு திமுக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் விவகாரத்தில் நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அறிவித்த போராட்டத்தில் பொதுமக்கள் யாரும் பங்கேற்கவில்லை. மேலும் திருப்பரங்குன்றம் கிரிவலம் பாதையில் வழக்கத்தை விட அதிக அளவிலான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். அந்த குறிப்பிட்ட பிரிவினர் 2026 தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு காய் நகர்த்தி வருகின்றனர் என்று தெரிவித்தார்.