சென்னை, மார்ச் 30, 2026: சென்னை புழுதிவாக்கம் பறக்கும் ரயில் நிலையத்தில் உள்ள மின்தூக்கியில் சிக்கிய 17 பேரை, இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். சென்னையில் பறக்கும் ரயில் சேவைகள் வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரை இயங்கி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சேவை பரங்கிமலை வரை நீட்டிக்கப்பட்டது. அதாவது, வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான சேவை கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
சென்னையைப் பொருத்தவரையில், மின்சார ரயில் சேவையை நம்பி தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். வேலைக்கு செல்லும் மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பறக்கும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: குளிருமா தமிழகம்? ஏப்ரல் 5 வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
சென்னை பறக்கும் ரயில் திட்டம்:
பறக்கும் ரயில் திட்டம் கட்டமைக்கப்பட்டிருந்தாலும், வழக்குகள் தொடரப்பட்ட காரணத்தால் அது நீண்ட காலமாக இயக்கப்படாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு கட்ட சோதனைகளும் நடத்தப்பட்டன. அதன் பின்னர், இந்த பறக்கும் ரயில் சேவை மார்ச் 14ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
சுமார் 5 கிலோமீட்டர் நீளமுடைய இந்த பறக்கும் ரயில் சேவை நீட்டிப்பு திட்டம் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் மற்றும் பரங்கிமலை ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் சேவை நின்று செல்கிறது. ஆனால் தற்காலிகமாக ஆதம்பாக்கத்தில் நிறுத்தம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புழுதிவாக்கம் ரயில் நிலைய லிஃப்டில் சிக்கிய 17 பேர்:
இந்த நிலையில், சென்னை புழுதிவாக்கம் பறக்கும் ரயில் நிலையத்தில் உள்ள மின்தூக்கியில் எப்போதும் போல மக்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மின்தூக்கி பாதி வழியிலேயே நின்றது. இதனால் அதற்குள் இருந்த 17 பேர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சிக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்பு துறையினர் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர், மின்தூக்கியின் மேல் தள கதவை திறந்து, உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதலில் குழந்தைகள், பின்னர் பெண்கள், இறுதியாக ஆண்கள் என அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு:
மொத்தம் 17 பேர் சிக்கியிருந்த நிலையில், இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மின்தூக்கி திடீரென செயலிழந்ததால் அந்த ரயில் நிலையத்தில் சில நேரம் பதற்றமான சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து, தற்போது அந்த மின்தூக்கி பயன்பாட்டில் இல்லாமல் வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.