நாளையுடன் நிறைவடையும் எஸ்ஐஆர் பணிகள்… வாக்காளர்களுக்கு எச்சரிக்கை
Voter List Update: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஜனவரி 18, 2026 அன்றுடன் முடிவடைவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாதிரி புகைப்படம்
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) ஜனவரி 18, 2026 நாளையுடன் நிறைவடைய உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பொதுமக்கள் இதனை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் வகையில் இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கடந்த 19, 2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், மரணமடைந்தவர்கள், முகவரி மாற்றம் செய்தவர்கள், இடமாற்றம் பெற்றவர்கள் மற்றும் இரட்டைப் பதிவுகள் உள்ளவர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, இதுவரை 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் இந்த இருமல் மருத்துக்கு தடை.. குழந்தைகளுக்கு தவறிக்கூட இதை கொடுக்காதீர்கள்!!
நாளையுடன் நிறைவடையும் எஸ்ஐஆர் பணிகள்
மேலும், வாக்காளர் விவரங்களில் சந்தேகம் இருந்தவர்களுக்கு கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, 12,43,363 வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர்களது விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்கள் சேர்ப்பதற்காக 12,80,110 பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து திருத்தப் பணிகளும் ஜனவரி 18, 2026 நாளையுடன் முழுமையாக நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாதத்திற்குள் சிறப்பு முகாம்கள் (Special Camps) நடத்தப்படுமா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சரியாக இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்து, தேவையான திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிக்க :நல்ல பாம்பை பிடித்து வந்து ஆரத்தி எடுத்து வினோத வழிபாடு…அதுவும் தமிழ்நாட்டில்…எங்கு தெரியுமா!
இதனிடையே, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், ஜனவரி 16, 2026 வரை மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர் பணிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, 6,40,84,624 படிவங்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் 6,38,25,877 படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜனவரி 18, 2026 நாளைக்குள் அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைய உள்ளன. வாக்காளர்கள் அனைவரும் தங்களது விவரங்களை சரிபார்த்து, உரிய திருத்தங்களைச் செய்துகொள்ள வேண்டியது அவசியம் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.