தமிழகத்தில் இருந்து இன்று முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது.. பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழகத்தில் அண்டை மாநில பேருந்துகளுக்கு அபராதம், சாலை வரி விதித்ததன் காரணமாகவே, அந்த மாநிலங்களில் தமிழக பேருந்துகளுக்கு சாலை வரி, அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கு தமிழக அரசு அண்டை மாநிலங்களுடன் பேசி சுமூக முடிவு எடுக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து இன்று முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது.. பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

Omni Bus

Updated On: 

10 Nov 2025 07:01 AM

 IST

சென்னை, நவம்பர் 10: தமிழகத்தில் இருந்து இன்று முதல் அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயங்காது என அனைத்து மாநிலங்களை சேர்ந்த ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது. பல்வேறு மாநில விதிமுறைகள் மற்றும் சாலை வரி பிரச்சனை காரணமாக ஏற்பட்ட கடுமையான பாதிப்பை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, அனைத்து விஷயங்களிலும் முன்னோடியாக செயல்படும் தமிழக அரசு, அண்டை மாநிலங்களுடன் பேசி அந்த மாநில பேருந்துகளுக்கு சாலை வரியில் விலக்களித்து, அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் சீராக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also read: குடியிருப்பு, வணிக இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் வசதி கட்டாயம்.. தமிழக அரசு உத்தரவு

கேரளாவில் ஆம்னி பேருந்துகள் சிறைப்பிடிப்பு:

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில், தமிழகத்தை மட்டும் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கேரள போக்குவரத்து துறையினரால் திடீரென சிறைப்பிடிக்கப்பட்டது. அதோடு, ரூ.70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று கடந்த 7 நாட்களாக கர்நாடக போக்குவரத்து துறையும் தமிழக பதிவெண் கொண்ட 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை தடுத்து ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.2.20 லட்சம் வரை அபராதம் விதித்து மொத்தம் ரூ.1.15 கோடி அபராதம் வசூலித்துள்ளது.

அண்டை மாநில பேருந்துகளுக்கு சாலை வரி விதிப்பு:

இதற்கு அண்டை மாநிலங்கள் கூறும் காரணம் ‘2021-ல் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட்டின்படி தமிழ்நாட்டில் அண்டை மாநில பேருந்துகளுக்கு சாலைவரி வசூலிக்கிறார்கள், எனவே நாங்களும் வசூலிக்கிறோம் என தெரிவிக்கிறார்கள். இந்த அபராத நடவடிக்கைகளின் காரணமாக ஆபரேட்டர்கள் இரட்டை வரியும், அபராதங்களும் செலுத்த இயலாத சூழலில் உள்ளோம். இந்த நிகழ்வை தொடர்ந்து நவ.7ம் தேதி இரவு 8 மணி முதல் தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்துக்கு இயக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்திருப்பதாக கூறியுள்ளனர்.

காலாண்டுக்கு ரூ.4.50 லட்சம் வரி:

இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து பாதிப்பு அடைந்து மற்றும் தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழக பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. ஒவ்வொரு மாநிலங்களுக்கு இடையில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டுக்கு (90 நாட்கள்) தமிழக சாலைவரி ரூபாய் ரூ.1,50,000, ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட் சாலை வரி ரூ.90,000 மற்றும் கேரளா, கர்நாடகா சாலை வரி சுமார் ரூ.2 லட்சம் என மொத்தம் காலாண்டுக்கு ரூ.4.50 லட்சம் செலுத்தி பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

Also read: ஜெயலலிதாவிடம் பொய் சொன்னார்… 2011-ல் செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார்… ஓபிஎஸ் மீது வைகோ குற்றச்சாட்டு

அனைத்து சங்கங்களும் முடிவு:

இந்த பிரச்சினையால் 10ம் தேதி (இன்று) மாலை 5 மணி முதல் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை கேரளா, கர்நாடகா, ஆந்திரா புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து சங்கங்களும் ஒருமனதாக தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியாவில் எல்லா விஷயங்களிலும் முன்னோடியாக செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவுடன் பேசி அந்த மாநில பேருந்துகளுக்கும் சாலை வரியில் விலக்களித்து அண்டை மாநிலங்களுக்கு சீராக பேருந்துகள் இயக்க வழிவகையை ஏற்படுதத்தி கொடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அந்தவகையில் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி இடையே ஓடக்கூடிய 600 பேருந்துகள் இன்று (நவ.10) மாலை முதல் ஓடாது. அதேசமயம் தமிழகத்திற்குள் ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.