பணியின்போது கஞ்சா பயன்படுத்திய காவல்துறையினர்…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்
Cops Caught Using Drugs: நீலகிரி மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தபோது காவல்துறையினர் 3 பேர் பணியின் போதே கஞ்சா பயன்படுத்திய அதிர்ச்சி தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் தற்போது 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாதிரி புகைப்படம்
நீலகிரி, பிப்ரவரி 4 : நீலகிரி மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்புக்காக காவல்துறை தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், அதே பிரிவைச் சேர்ந்த சிலர் கஞ்சா பயன்படுத்தியதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா, 3 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். கடந்த ஜனவரி 21, 2026 அன்று, ஊட்டியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குரூஸ் என்ற இளைஞர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பணியின்போது கஞ்சா பயன்படுத்திய காவல்துறையினரால் அதிர்ச்சி
இந்த நிலையில் ஊட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நசீர் அகமது என்ற காவலருக்கு, கஞ்சா விற்பனையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நசீர் அகமதுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். நசீர் அகமதுவிடம் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையில், அவர் கஞ்சா விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது மட்டுமல்லாமல், காவல்துறையைச் சேர்ந்த சிலர் அவரிடமிருந்து கஞ்சா வாங்கி பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இந்த விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க : ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்-கடன் ரத்து..அதிமுகவின் 2-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதி..எடப்பாடி போட்ட லிஸ்ட்!
இதனையடுத்து இந்த வழக்கு காவல்துறை சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து சிறப்பு பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், எருமாடு காவல்நிலையத்தில் பணியாற்றிய அபிசேகரன், கோத்தகரி காவல்நிலையத்தில் பணியாற்றிய மாயக்கண்ணன், மசினகுடி காவல்நிலையத்தில் பணியாற்றிய சாந்தகுமார் ஆகிய 3 பேர் நசீர் அகமதுவிடம் கஞ்சா வாங்கியது மட்டுமல்லாமல் அதனை பணியின்போதும் பயன்படுத்தியதும் உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிக்க : காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகள்…திமுக மூத்த நிர்வாகிகள் போர்கொடி?மாறும் கூட்டணி கணக்கு!
காவல்துறையினர் பணியிடை நீக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா 3 காவலர்களையும் பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டார் மேலும். இந்த விவகாரத்தில் வேறு காவலர்களுக்கு தொடர்பு உள்ளதா என்றும் அவர் விசாரிக்குமாறு உத்தரவிட்டார். ஒருபுறம் போதைப்பொருள் பயன்பாட்டை காவல்துறையினர் கட்டுப்படுத்தி வரும் நிலையில், அதே துறையை சேர்ந்த சில காவலர்களே கஞ்சா பயன்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் மீது கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.