ஊட்டி கொடையில் தொடரும் உறைபனி.. கடும் குளிருடன் நிலவும் பனிமூட்டம் – வரும் நாட்களில் எப்படி இருக்கும்?
Tamil Nadu Weather Update: தமிழகத்தைப் பொறுத்தவரையில், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் குறைந்த வெப்பநிலை பதிவாகி வருகிறது. ஊட்டியில் 6.6 டிகிரி செல்சியஸ், கொடைக்கானலில் 6.6 டிகிரி செல்சியஸ், வால்பாறையில் 8 டிகிரி செல்சியஸ், குன்னூரில் 9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், ஜனவரி 20, 2026: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விலகிய நிலையில், வரக்கூடிய நாட்களில் வறண்ட வானிலைதான் நிலவக்கூடும். இந்த சூழலில், இரவு நேர வெப்பநிலையில் மாற்றம் காணப்படுகிறது. அதாவது, இரவு முதல் அதிகாலை நேரத்தில் வெப்பநிலை கிட்டத்தட்ட 20 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து பதிவாகி வருகிறது. இதன் காரணமாக அதிகாலை வேளையில் பனிமூட்டம் நிலவுகிறது.
அதிகாலையில் காணப்படும் பனிமூட்டம்:
தமிழகத்தைப் பொறுத்தவரையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் உறைபனி அவ்வப்போது சில இடங்களில் காணப்படுகிறது. இந்த நிலையில், வரக்கூடிய நாட்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் இருந்து விலகிய வடகிழக்கு பருவமழை.. இனி வறண்ட வானிலை தான் – வானிலை நிலவரம் என்ன?
இது தொடர்பான அவரது சமூக வலைதளப் பதிவில், தமிழகத்தில் வரக்கூடிய 25ஆம் தேதி சில இடங்களில் மழைப் பதிவு இருக்கும் என்றும், இதன் காரணமாக 25ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு இரவு நேர வெப்பநிலை சற்று அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மீண்டும் வெப்பநிலை குறையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் குறைந்த வெப்பநிலை பதிவாகி வருகிறது. ஊட்டியில் 6.6 டிகிரி செல்சியஸ், கொடைக்கானலில் 6.6 டிகிரி செல்சியஸ், வால்பாறையில் 8 டிகிரி செல்சியஸ், குன்னூரில் 9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஊட்டி கொடையில் உறைபனிக்கு வாய்ப்பு:
Ooty and Kodaikanal takes the top coldest place from Araku. When is the next spell of rains for Tamil Nadu ?
=================
Next spell of rains in Tamil Nadu will be around 25th January (1-2 days spell). This will increase cloud cover and increase night temp for short period… pic.twitter.com/DGjPcSaHPF— Tamil Nadu Weatherman (@praddy06) January 19, 2026
வடகிழக்கு பருவமழை தமிழகத்திலிருந்து விலகிய சூழலில், வரக்கூடிய நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது. ஆனால், அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உறைபனியைப் பொறுத்தவரையில், ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் சில இடங்களில் அதிகாலை வேளையில் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகாலை வேளையில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படக்கூடும். குறிப்பாக, மீனம்பாக்கம், பல்லாவரம், திரிசூலம், ஆவடி, அயனாவரம், ஆளுநர் மாளிகை, சின்னமலை உள்ளிட்ட பகுதிகளில் மிஸ்ட் / பனிமூட்டம் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.