அதிகரிக்கும் இரிடியம் மோசடி.. சிபிசிஐடி அதிரடி சோதனை.. 50 பேர் கைது..

Iridium Scam: இரிடியம் மோசடியில் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்காக எட்டு காவல் துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 20 காவல் ஆய்வாளர்கள், 15 காவல் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய 15 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகரிக்கும் இரிடியம் மோசடி.. சிபிசிஐடி அதிரடி சோதனை.. 50 பேர் கைது..

கோப்பு புகைப்படம்

Updated On: 

26 Oct 2025 09:24 AM

 IST

அக்டோபர் 26, 2025: தமிழகத்தில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாக மேலும் 50 பேரை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் இரிடியம் தொடர்பான மோசடிகள் கடந்த சில காலங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை நம்பி பலரும் பணம் செலுத்தி ஏமாறி வருகின்றனர். இதனைத் தடுப்பதற்காக காவல்துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், “ரிசர்வ் வங்கியில் கோடி கணக்கில் பணம் வைத்திருப்பதாகவும், சேவை கட்டணம் செலுத்தினால் அந்தப் பணத்தை வெளியே எடுக்கலாம்” எனவும், “ஒரு லட்சம் முதலீடு செய்தால் சுமார் ஒரு கோடி ரூபாய் வரையில் லாபம் கிடைக்கும்” என்றும் பொய்யான தகவல்களை கூறி மோசடி செய்வதாக சிபிசிஐடிக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.

இரிடியம் மோசடி – சிபிசிஐடி அதிரடி சோதனை:

இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காக சிலர் போலியான அறக்கட்டளைகளைத் தொடங்கி, பலரிடமும் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததாகவும் சிபிசிஐடி அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி அதிகாரிகள் தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 2025 செப்டம்பர் மாதத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல்.. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ.. ஏ1, ஏ2, ஏ3 லிஸ்டில் யார் பெயர்?

இதில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாக 30 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடந்த விசாரணையில், இந்த மோசடியில் யார் யார் ஈடுபட்டுள்ளனர், இதில் யார் யார் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்தக் குழு எப்படி செயல்படுகிறது, யாரை குறிவைத்து செயல்படுகிறது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தனிப்படை மூலம் 27 பேர் கைது:

இந்த விசாரணையின் அடிப்படையில், இரிடியம் மோசடியில் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்காக எட்டு காவல் துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 20 காவல் ஆய்வாளர்கள், 15 காவல் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய 15 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படைகள் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பலரிடமும் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: விஷம் வைத்து 50 மயில்கள் சாகடிப்பு.. தென்காசியில் நடந்த அதிர்ச்சி..

அதன் முடிவாக, இரிடியம் மோசடியில் தொடர்புடையதாக தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த சந்திரன், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரைச் சேர்ந்த ராணி, திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த யுவராஜ், தேனி மாவட்டம் வருசநாட்டைச் சேர்ந்த பழனியம்மாள், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜசிவம் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு அறிவுரை:

தற்போது வரை இரிடியம் மோசடியில் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், “ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி இரிடியம் விற்பனை மூலமாக கோடிக்கணக்கில் வெளிநாடுகளில் இருந்து பணம் கிடைக்கும்” போன்ற வதந்திகளை நம்பி மக்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று சிபிசிஐடி அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.