காவல் நிலையம் முன் தீக்குளித்த தொழிலாளி.. பறிபோன உயிர்.. தூத்துக்குடியில் சம்பவம்

Thoothukudi Crime News : தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி உயிரிழந்துள்ளார். வழக்குப்பதிவு செய்ய மறுத்ததால், தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 2025 அக்டோபர் 10ஆம் தேதியான நேற்று உயிரிழந்தார்.

காவல் நிலையம் முன் தீக்குளித்த தொழிலாளி.. பறிபோன உயிர்.. தூத்துக்குடியில் சம்பவம்

உயிரிழந்த தொழிலாளி

Updated On: 

11 Oct 2025 09:43 AM

 IST

தூத்துக்குடி, அக்டோபர் 11 :  தூத்துக்குடியில் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீக்குளித்து படுகாயம் அடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுவிசேஷராஜ் (42). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். சுவிசேஷராஜ் அப்பகுதியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வந்தார். இதற்கிடையில் தனது மனைவியின் சகோதரி வீட்டிற்கு சுவிசேஷராஜ் அடிக்கடி சென்று வந்துள்ளார். இதனை அவரது உறவினர்கள் கண்டித்துள்ளனர். இருப்பினும், அவர் மனைவியின் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, மனைவியின் தங்கை கணவர் மற்றும் அவரது உறவினர்கள் சுவிசேஷராஜுக்கு தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் நீடித்த நிலையில், சுவிசேஷராஜை மனைவியின் தங்கை கணவர் மற்றும் அவரது உறவினர்கள் தாக்கியுள்ளனர்.

மேலும், சுவிசேஷராஜின் செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்துள்ளனர். இந்த சம்பவத்தில் சுவிசேஷராஜுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, அவர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். தொடர்ந்து, முத்தையாபுரம் காவல்நிலையத்திற்கு சென்று தன்னை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார் . 2025 அக்டோபர் 9ஆம் தேதி இரவு 11 மணியளவில் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த போலீசாரிடம் இந்த விவகாரத்தை கூறிய அவர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய கோரியுள்ளார். இதனை அடுத்து, போலீசார் காலையில் வந்து புகார் கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்துள்ளார்.

Also Read : 15 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை.. சிக்கிய பைக் மெக்கானிக்!

காவல் நிலையம் முன் தீக்குளித்த தொழிலாளி பலி

ஆனால், தற்போதே புகார் அளிக்கிறேன் என கூறினார். ஆனால், இதற்கு போலீசார் மறுத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து, சுவிசேஷராஜ் காவல் நிலையத்திற்கு வெளியே இருந்து மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது உடலில் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் சுவிசேஷராஜ் உடலில் எரிந்த தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடலில் 60 சதவீதத்திற்கு மேல் தீக்காயங்கள் இருந்தன. இந்த நிலையில், 2025 அக்டோபர் 10ஆம் தேதியான நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read : தீபாவளிக்கு ரிட்டர்ன் டிக்கெட் போடலையா? – சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)