வைகோவுக்கு எதிராக களமிறங்கும் மல்லை சத்யா.. உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
மல்லை சத்யாவுக்கும், வைகோ, துரை வைகோவுக்கும் இடையே சமீபகாலமாக தொடர்ச்சியாக முரண்பாடு ஏற்பட்டு வருவது சர்ச்சையை கிளப்பியிருந்தது. ஏற்கனவே கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுடன் மல்லை சத்யா தொடர்பு வைத்திருக்கிறார் என்றும், அவர் துரோகம் செய்கிறார் என்றும் வைகோ சரமாரியாக குற்றம் சாட்டியிருந்தார்.

சென்னை, ஜூலை 25: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (Marumalarchi Dravida Munnetra Kazhagam) கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு (Vaiko) எதிராக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுடன் மல்லை சத்யா தொடர்பு வைத்திருக்கிறார் என்றும், அவர் துரோகம் செய்கிறார் என்றும் வைகோ சரமாரியாக குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே 2025, ஆகஸ்ட் 2ம் தேதி மக்கள் நீதிமன்றத்தில் நீதி கேட்டு மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டம் தொடர்பாக சேப்பாக்கம் காவல்துறையில் அவர் மனு அளிக்க, அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தன்னை துரோகி என வைகோ சொன்னதால் கடும் அதிருப்தியில் இருக்கும் மல்லை சத்யா இந்த போராட்டத்தின்போது பல்வேறு முக்கிய தகவல்களை வெளியிடுவார் என சொல்லப்படுகிறது.
Also Read: ராஜினாமா முடிவை திரும்ப பெற்றது ஏன்..? மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ விளக்கம்!
மதிமுகவில் முற்றும் மோதல்
வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திமுகவின் தீவிரமாக பணியாற்றிய வைகோ, அக்கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இக்கட்சியை தொடங்கினார். அன்றைய காலக்கட்டத்தில் மிகவும் சவாலாக விளங்கிய கட்சி என்ற பெருமையை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டிருந்தது. கட்சி தொடங்கிய காலம் தொட்டு திமுக, அதிமுக கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வருகிறார் வைகோ.
தற்போது திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கிறது. வைகோவின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் நேற்று (ஜூலை 24) நிறைவடைந்தது. அவரது மகனான துரை வைகோ மதிமுகவின் தலைமை கழக செயலாளராகவும், திருச்சி நாடாளுமன்ற எம்.பியாகவும் இருந்து வருகிறார். இப்படியான நிலையில் மதிமுகவில் ஆரம்ப காலம் தொட்டே மல்லை சத்யா உறுப்பினராக இருந்து வருகிறார். வைகோவின் தளபதி என அறியப்படும் இவரை பல நேரங்களில் பல மேடைகளில் வைகோ புகழ்ந்து தள்ளும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தார்.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே மல்லை சத்யா – துரை வைகோ இடையே மோதல் இருந்து வருகிறது. துரை வைகோவுக்கு முன்னாள் இருந்தே மல்லை சத்யா கட்சியில் இருப்பதால் அவருக்கு செல்வாக்கு அதிகமாக உள்ளது. இது துரை வைகோவுக்கு பிடிக்கவில்லை எனவும் சொல்லப்பட்டது. இதன் பின்னர் இருவரையும் வைகோ சமாதானம் செய்தார். ஆனால் தற்போது மல்லை சத்யா மீது வைகோவே அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்துவது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.