இலங்கை தம்பதிக்கு பிறந்தவருக்கு இந்திய பாஸ்போர்ட்? நீதிமன்றம் முக்கிய உத்தரவு

HC Orders Passport : திருச்சியில் இலங்கை அகதி பெற்றோருக்கு பிறந்த கோகுலேஷ்வரன் என்பவருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இலங்கை தம்பதிக்கு பிறந்தவருக்கு இந்திய பாஸ்போர்ட்? நீதிமன்றம் முக்கிய உத்தரவு

மாதிரி புகைப்படம்

Published: 

15 Nov 2025 19:24 PM

 IST

திருச்சியில் இலங்கை (Sri Lanka) தமிழ் அகதி தம்பதிக்குப் பிறந்தவருக்கு இந்திய பாஸ்போர்ட் (Passport) வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான முழுமையான விவரங்களை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.  திருச்சியைச் சேர்ந்த கோகுலேஸ்வரன் என்ற நபர், தனக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கோரி  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கினார். மனுதாரர் 1986 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்தவர் என்பது பிறப்புச் சான்றிதழ் மூலம் நிரூபிக்கப்பட்டது. மேலும், திருச்சி மாநகராட்சி வழங்கிய உறுதிப்படுத்தல் சான்றிதழும் இதனை நிரூபிக்கிறது.

இலங்கை அகதிகளின் மகனுக்கு பாஸ்போர்ட் கிடைப்பதில் சிக்கல்

அவரது பெற்றோர் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து திருச்சியில் உள்ள இலங்கை தமிழ் அகதி முகாமில் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். மனுதாரர் பாஸ்போர்ட் கோரி 2024 பிப்ரவரியில் விண்ணப்பித்தபோது, காவல்துறையின் பரிசோதனையில்  அவர் இலங்கைத் தமிழர் என்பதை சுட்டிக்காட்டி, அவரது விண்ணப்பம் நிலுவையில் வைக்கப்பட்டது. இதனால் மனுதாரர் பிறப்புச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல், ஆதார் கார்டு உள்ளிட்ட பல ஆதாரங்களை சமர்ப்பித்தும் பிரச்சனை தீராததால் நீதிமன்றத்தை அணுகினார்.

இதையும் படிக்க : “தமிழ்நாடு தான் பாஜகவின் அடுத்த இலக்கு”.. நயினார் நாகேந்திரன் சூளுரை!

கோகுலேஸ்வரன் தனது மனுவில், நான் இந்தியாவில் பிறந்ததால் குடியுரிமைச் சட்டம், 1955 பிரிவு 3 படி, பிறப்பால் இந்திய குடிமகன் என குறிப்பிட்டார். நீதிபதி அவரது விவரங்களை ஆய்வு செய்து முக்கியமான சட்ட விவரங்களை எடுத்துக் கூறினார்.  இந்திய குடியுரிமைச் சட்டத்தின் படி, கடந்த 1987 ஜூலை 1க்கு முன் இந்தியாவில் பிறந்தவர்களுக்கு, அவர்களின் பெற்றோர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தானாகவே இந்திய குடிமக்களாக கருதப்படுவார்கள் என்ற விதி உள்ளது.

பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட்ட நீதிபதி

இதன்படி, மனுதாரர் கடந்த 1986 ஆம் ஆண்டில் பிறந்ததால், சட்டப்படி 100 சதவிகிதம் இந்திய குடிமகன் என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. அவரது பிறப்புச் சான்றிதழும் அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில், பெற்றோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காரணம் காட்டி பாஸ்போர்ட் வழங்க மறுப்பது சட்டத்துக்கு எதிரானது என்று நீதிமன்றம் கடுமையாக தெரிவித்தது.

இதையும் படிக்க : இரண்டு நாள் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு.. எத்தனை லட்சம் பேர் எழுதுகின்றனர்? முழு விவரம்..

இதனையடுத்து, நீதிபதி பி.டி.ஆஷா,  வருகிற 8 வாரங்களுக்குள் மனுதாரருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு, இந்தியாவில் பிறந்த அகதி முகாமில் வசிப்போரின் குழந்தைகள் பெற்ற குடியுரிமை உரிமையை தெளிவாக விளக்கும் முக்கியமான தீர்ப்பாகக் கருதப்படுகிறது.