Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னை: ரயில் பயணிகளுக்கு காவலனான “டைகர்”: தப்பிய திருடனை பிடித்த நாய்…

Chennai Central's Hero Dog: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவலாளியாகப் பணியாற்றும் தெருநாய் டைகர், ஒரு சங்கிலிப்பறிப்பு குற்றவாளியைப் பிடிக்க போலீஸாருக்கு உதவியது. சிசிடிவி காட்சிகள் வைரலாகியுள்ளன. டைகர், பயணிகளை பயமுறுத்தி ரயில் பெட்டிகளுக்குள் செல்ல வைப்பதும், போலீசாரின் விசுவாசமான துணையாக இருப்பதும் பாராட்டைப் பெற்றுள்ளது.

சென்னை: ரயில் பயணிகளுக்கு காவலனான “டைகர்”: தப்பிய திருடனை பிடித்த நாய்…
தப்பிய திருடனை பிடித்த நாய்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 27 Jun 2025 14:28 PM

சென்னை ஜூன் 27: சென்னை (Chennai) சென்ட்ரல் ரயில் நிலையத்தில் (Central Railway Station) காவலாளியாக பணியாற்றும் “டைகர்” எனும் நாய், (Street Dog named Tiger) ஒரு சங்கிலிப்பறிப்பு குற்றவாளியை பிடிக்க போலீசாருக்கு உதவியதின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன. தெருநாயாக வந்த டைகர், போலீசாரின் அன்பால் விசுவாசமிக்க காவலனாக வளர்ந்துள்ளது. பயணிகள் வாசலில் அமர்ந்தால் பயமுறுத்தி உள்ளே செல்ல வைப்பதும் இதன் சாதனை. ஒரு ஆசாமி போலீசிடம் இருந்து தப்பியபோது, டைகர் விரைந்து பாய்ந்து பிடித்து காவலருக்கு உதவியது. மற்ற தெரு நாய்கள் அகற்றப்பட்டபோதும், டைகரை மட்டும் போலீசார் பாதுகாத்துள்ளனர். அதன் விசுவாசமும் சின்சியரான பணியாற்றும் திறனும் பாராட்டை பெற்றுள்ளது.

“டைகர்” – ரயில்வே காவல் நிலையத்தின் விசுவாசமிக்க ஊழியன்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த ஒரு சங்கிலிப் பறிப்பு குற்றவாளியைப் போலீசார் பிடிப்பதற்கு உதவியாக இருந்த ஒரு நாய் பற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. “டைகர்” என்று செல்லமாக அழைக்கப்படும் அந்த நாய், போலீசாரின் விசுவாசமான துணையாகவும், ரயில் நிலையப் பயணிகளின் காவலனாகவும் வலம் வருகிறது.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு, குட்டியாக சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்திற்கு வந்த ஒரு தெரு நாய், அங்குள்ள போலீசாரின் உணவு மற்றும் அன்பினால் அவர்களின் விசுவாசமான ஊழியனாக மாறியது. “டைகர்” என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டு, ரயில்வே போலீசாருடன் ஒரு குடும்ப உறுப்பினராகவே அது வாழ்ந்து வருகிறது.

சின்சியரான “டைகர்” இன் பாதுகாப்புப் பணி

இந்த “டைகர்” வெறுமனே சுற்றித் திரியும் நாய் அல்ல. அது ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபடுகிறதாம். குறிப்பாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில்களில் பயணிகள் யாரும் வாசலில் அமர்ந்து பயணம் செய்தால், அவர்களைக் கடிப்பது போலப் பயமுறுத்தி, உள்ளே செல்ல வைக்குமாம். இந்த “சின்சியர் டியூட்டி”யைப் பலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வைரலாக்கியுள்ளனர். இப்படிப் பயணிகளுக்கு ஒரு காவலனாகவே “டைகர்” வலம் வருகிறது.

சங்கிலிப் பறிப்பு குற்றவாளியைப் பிடித்த சம்பவம்

சமீபத்தில் ஒரு இரவுப் பணியில் இருந்த காவலர் ஒருவர், சந்தேகத்திற்குரிய ஒரு நபரைப் பிடித்து வந்து விசாரித்துள்ளார். விசாரணையில், அந்த நபர் பல்வேறு இடங்களில் நடந்த சங்கிலிப் பறிப்பு வழக்குகளில் தொடர்புடையவன் என்பது தெரியவந்துள்ளது.

அப்போது, காவலரின் கையை தட்டி விட்டு அந்த ஆசாமி ஓட்டம் பிடித்துள்ளார். அடுத்த கணமே, அருகில் படுத்துக் கொண்டிருந்த “டைகர்” பாய்ந்து சென்று, காவலரிடம் இருந்து தப்பிய அந்தக் குற்றவாளியை விரட்டிப் பிடித்துள்ளது. காவலர் அருகில் ஓடிச் சென்று அவனது சட்டையைப் பிடித்து இழுத்து வர, காவல் நிலையம் வரும் வரை “டைகர்” அவனது பேண்டைக் கவ்விப் பிடித்தபடியே வந்துள்ளது.

பெருமைமிகு “டைகர்”

“டைகர்” இன் இந்தச் செயல், அதன் விசுவாசத்தையும், புத்திசாலித்தனத்தையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. அதனால்தான், ரயில் நிலையத்தில் சுற்றித் திரியும் மற்ற தெரு நாய்களை எல்லாம் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றபோதும்கூட, “டைகர்”ரை மட்டும் விட்டுச் சென்றதாக அங்குள்ள காவலர்கள் பெருமையுடன் தெரிவிக்கின்றனர். “டைகர்” ரயில்வே போலீசாருக்கு ஒரு கெட்டிக்காரனாகவும், விசுவாசமிக்க ஊழியனாகவும் தொடர்ந்து வலம் வருகின்றது.