TVK Vijay: கரூர் செல்லும் விஜய்.. எப்போ தெரியுமா? – வெளியான தகவல்!
கரூர் சோக சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை அக்டோபர் 17 அன்று விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க திட்டமிட்டுள்ள அவர், காவல்துறை அனுமதி கோரியுள்ளார். நிகழ்ச்சிக்கான இடத்தேர்வு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மண்டபங்கள் கிடைப்பதில் சவால்கள் நிலவி வருவதாக சொல்லப்படுகிறது.

விஜய்
கரூர், அக்டோபர் 17: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க அம்மாவட்டத்திற்கு செல்வதற்காக அனுமதி வேண்டி காத்திருக்கிறார். இந்த நிலையில் அக்டோபர் 17ம் தேதி அவர் அங்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் கடந்த 2025 செப்டம்பர் 27ஆம் தேதி சனிக்கிழமை அன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் இரவு 7 மணி அளவில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற பரப்புரைக்கு வந்த அவரை காண அனுமதிக்கப்பட்ட இடத்தில் சுமார் 27 ஆயிரம் மக்கள் கூடி இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்வு முடிந்த பின்னர் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், சிறுவர்- சிறுமியர், ஆண்கள், பெண்கள் என சுமார் 41 பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேசமயம் கரூரில் தேர்தல் பரப்புரை முடிந்து மீண்டும் திருச்சி விமான நிலையம் சென்று கொண்டிருந்த விஜய்க்கு இப்படி ஒரு துயர சம்பவம் நடைபெற்ற தகவல் வந்த நிலையில், அவர் மீண்டும் சென்னை திரும்பியது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.
இதையும் படிங்க: கரூர் செல்ல அனுமதி எதற்கு? அந்த சூழல் தமிழ்நாட்டில் இல்லை ; விஜய்க்கு எதிராக கேள்வி எழுப்பிய அண்ணாமலை
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக கட்சி கழக நிர்வாகிகள், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் என பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்கள் கழித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டிருந்தார்.
ஆனால் அவர் இதுவரை கரூர் மாவட்டத்திற்கு செல்லவில்லை. மீண்டும் தான் வந்தால் மக்கள் கூட்டம் கூடி ஏதாவது அசம்பாவிதம் அல்லது விபரீத சம்பவங்கள் நடைபெற்று விடக்கூடாது என்பதால் காவல்துறையினரின் அனுமதி கேட்டு தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதனை பரிசீரித்த டிஜிபி அலுவலகம் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் வரும் அக்டோபர் 17ஆம் தேதி விஜய் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சந்தித்து கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் இந்த நிகழ்ச்சியை மிகவும் பாதுகாப்பாக நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய்க்கு உங்க அட்வைஸ் என்ன ? கரூரில் கமல்ஹாசன் சொன்ன கமெண்ட்
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக உயிரிழந்த 41 பேரின் குடும்பம் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் நேரம் ஆகியவை முடிவு செய்த பிறகு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் இன்று அல்லது நாளை சந்தித்து அனுமதி கேட்டு மனு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கரூரில் செயல்பட்டு வரும் மண்டபங்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் சில மண்டபங்கள் விஜய் நிகழ்வுக்கு வாடகைக்கு தர தயங்குவதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.