நடுங்க வைக்கும் குளிர்.. மழைக்கு வாய்ப்பு இருக்கா? என்ன சொல்கிறது வானிலை மையம்?
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என்றும், நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
சென்னை, டிசம்பர் 19: தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்றும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, குமரிக் கடல் பகுதிக்கு நகர்ந்து வந்தள்ளதால் தென் மாவட்டங்களில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது. அதேசமயம், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மார்கழி மாதம் தொடங்கியதில் இருந்து, பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதிகாலையில், பனியால் நடை பயிற்சி செல்பவர்கள், நோயாளிகள் மற்றும் விவசாய விளை பொருட்களை கொண்டு செல்பவர்கள் என பலரும், வெளியில் வர முடியாமல், காலை 8 மணிக்கு மேல் தான் வீடுகளில் இருந்து வெளியே வருகின்றனர். தொடர்ந்து, எப்போது வரை கடும் குளிர் நீடிக்கும் என்பது குறித்து வானிலை மையம் என்ன சொல்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க : இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்கள் கட்சிக்கு அதிமுக என்ற பெயர் எதற்கு? – முதல்வர் ஸ்டாலின் காட்டம்..
இன்று மழைக்கு வாய்ப்பு:
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கை தெற்கில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி காரணமாக வடக்குப் பகுதியில் இருந்து காற்று தெற்குப் பகுதி நோக்கி ஈர்க்கப்படுவதால், தமிழ்நாடு ஊடாக காற்று பயணிக்கிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் கடும் குளிர்காற்று வீசிவருவதால், இரவு நேரங்களில் கடும் குளிர் இருக்கும். கடல் பரப்பில் நீராவிக் காற்றைவிட குளிர் அதிகம் நீடித்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. இடையிடையே மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவித்துள்ளது.
கடும் குளிர் காற்று வீசும்:
அதேபோல், 19ம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மீண்டும் குளிர் காற்று வீசத் தொடங்கும். மேற்கு பகுதியில் நிலை கொண்டுள்ள சுழற்சியின் காரணமாகவும் குளிர் காற்று வீசும். அத்துடன், குளிரை ஈர்க்கும் சுழற்சியும் தென் அரைக்கோளத்தில் உருவாகும் என்பதால், வரும் 23ம் தேதி வரை குளிர் காற்று கடுமையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பநிலை குறையும்:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உறைபனி ஏற்பட வாய்ப்பு:
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க : சொத்து பத்திரத்தில் டிஜிட்டல் கையெழுத்து.. மோசடிகளை தடுக்க வருகிறது புதிய மாற்றம்!!
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.