இன்ஸ்டாகிராம் காதலி கொடூரக் கொலை.. கணவனுக்கு தாலியை அனுப்பி வைத்த இளைஞர்!!
Instagram girlfriend brutally murdered: இதுவரையில் இன்ஸ்டா சுமதிக்கு ரூ.1 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளார். ஆனால் அவர் வேறு நபர்களுடன் போனில் பேசி வந்தது, அவருக்கு ஆத்திரமூட்டியது. இதையடுத்து, இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, கோபத்தில் சுமதி அணிந்திருந்த துப்பட்டாவால் அவரது கழுத்தை நெறித்து வெங்கடேஷ் கொலை செய்துள்ளார்.

இன்ஸ்டா காதலி கொலை
சேலம், ஜனவரி 01: ஏற்காட்டில் காணாமல் போன சுமதியின் தாலி பார்சலில் வந்ததால் கணவர் அதிர்ச்சியடைந்தார். விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய வெங்கடேஷ் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில் சுமதி கொலை செய்யப்பட்டு, உடலை சாக்குமூட்டையில் கட்டி வீசியது அம்பலமானது. சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் சண்முகத்தின் (28) மனைவி சுமதி (24), கடந்த டிசம்பர் 23ம் தேதியன்று வீட்டை விட்டு வெளியேறிவர் மீண்டும் திரும்பவில்லை. இதையடுத்து சண்முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அடுத்த நாள், ஊருக்கு வந்த பேருந்து ஓட்டுநரின் மூலம் ஒரு பார்சல் சண்முகத்திடம் வந்து சேர்ந்தது. அதைத் திறந்தபோது, சுமதி அணிந்திருந்த தாலி உள்ளதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் முதன் முறையாக சோலார் படகு சேவை…எங்கு தெரியுமா… குஷியில் சுற்றுலா பயணிகள்!
தாலியை கழற்றி கொடுத்துவிட்டார்:
அதை யார் அனுப்பினார் என்று விசாரித்ததில், அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (22) என்பவரே அதனை அனுப்பியதும் வெளிச்சத்துக்கு வந்தது. தொடர்ந்து, வெங்கடேஷிடம் சண்முகம் விளக்கம் கேட்டபோது, “சுமதி தாலியை கழற்றி விட்டு இனி உன்னுடன் வாழ மாட்டேன் என்று கூறி வேறு இடத்துக்கு சென்றுவிட்டார்” என கூறியுள்ளார். இதனால், சந்தேகத்தின் பேரில் போலீசாரிடம் சண்மூகம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு வெங்கடேஷின் பதில்கள் சந்தேகத்தை அதிகரித்தது.
போலீசார் விசாரணையில் திடுக் தகவல்:
இதையடுத்து, போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், வெங்கடேஷ் அதிர்ச்சியூட்டும் வகையில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி, சுமதியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானதாகவும், பின்னர் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து அடிக்கடி ஏற்காடு காபி தோட்டத்தில் சந்தித்து உல்லாசமாக இருப்பது வழக்கம் என்றும் கூறியுள்ளார். இதனிடையே, அவர்கள் இருவரும் கடைசியாக சந்தித்தபோது, சமீபத்தில் சுமதி தனது தொடர்பை தவிர்த்து வந்தது ஏன் என்பது குறித்து வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
காதலி வேறு நபர்களுடன் பேசியதால் ஆத்திரம்:
அதோடு, சுமதி தனது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களையும், போனையும் ரகசிய குறியீடுடன் கூடிய லாக் போட்டு வைத்துள்ளார். இதனைப் பார்த்த வெங்கடேஷ், கடுமையாக ஆத்திரமடைந்துள்ளார். அதோடு, சுமதிக்கு வேறு யாருடனும் தொடர்பு உள்ளதா என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுவரையில் இன்ஸ்டா சுமதிக்கு ரூ.1 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளார். ஆனால் அவர் வேறு நபர்களுடன் போனில் பேசி வந்தது, அவருக்கு ஆத்திரமூட்டியது.
300 அடி பள்ளத்தாக்கில் சடலம்:
இதையடுத்து, இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, கோபத்தில் சுமதி அணிந்திருந்த துப்பட்டாவால் அவரது கழுத்தை நெறித்து வெங்கடேஷ் கொலை செய்துள்ளார். தொடர்ந்து, உடலை சாக்குப்பையில் கட்டி, குப்பனூர் சாலையிலுள்ள 300 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தூக்கி வீசியுள்ளார். பின்னர் கணவனுக்கு சந்தேகம் வராமல் பார்சல் மூலம் தாலி அனுப்பி ஏமாற்ற முயற்சி செய்துள்ளார். அதோடு, வேறு நபருடன் சென்றுவிட்டார் என்று கூறினால் சந்தேகம் வராது என்றும் திட்டமிட்டுள்ளார்.
மேலும் படிக்க: கோவையில் இரு வடமாநில தொழிலாளிக்கு கத்திக்குத்து….இரு இளைஞர்கள் வெறிச்செயல்!
எனினும், போலீசார் வலையில் சுலபமாக சிக்கியுள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சுமதி உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அதோடு, கொலையாளி வெங்கடேஷை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.